திரு அவதாரப் படலம் - 271

bookmark

உதிர்ந்தவற்றையும் சுமித்திரைக்கு அளித்தல்

271.

பின்னும். அப் பெருந்தகை. பிதிர்ந்து விழ்ந்தது
தன்னையும். சுமித்திரைதனக்கு நல்கினான்-
ஒன்னலர்க்கு இடமும். வேறு உலகின் ஓங்கிய
மன்னுயிர்தமக்கு நீள் வலமும். துள்ளவே.
 
பின்னும்       அப்பெருந்தகை    -    மறுபடியும்    அந்தப்
பெருந்தகைமையுள்ள    தயரத    மன்னன்;   பிதிர்ந்து   வீழ்ந்தது
தன்னையும்   -  பொன்  தட்டிலே  சிதறி  வீழ்ந்த   பிண்டத்தையும்;
ஒன்னலர்க்கு  இடமும்  வேறு  மன்னுயிர்  தமக்குநீள்   வலமும்
துன்ன  -   பகைவர்களுக்கு    இடப்புறமும்.    மற்றும்    உலகத்து
உயிர்களுக்கெல்லாம் வலப்புறமும்  தோள்.  கண்  முதலியன   துடிக்க;
சுமித்திரை தனக்கு நல்கினான் - சுமித்திரைக்கே கொடுத்தான். 

ஆண்களுக்கு  இடம்   துடித்தல்  தீமை.  வலம் துடித்தல் நன்மை
என்பதால்:   பகைவர்களுக்கு   இடமும்.  மற்றுள்ளோர்க்கு   வலமும்
துடித்ததென்றான்.   மன்னுயிர்:   விலை   பெற்ற   உயிர்  (புகழோடு
நிலவுதலாம்).  தயரதன்  அமுத  பிண்டத்தைத்  தேவியர்  மூவருக்கும்
முறையே  கொடுத்துப்  பின்னர்  பிதிர்ந்து  சிதறியவைகளைத்  திரட்டி
மறுபடியும் சுமித்திரை கைகளில் கொடுத்தான். இருபங்குகளைப்  பெற்ற
சுமித்திரை இரு பிள்ளைகளைப் பெற்றாள் என்பதை அறிகிறோம்.   91