திரு அவதாரப் படலம் - 272

bookmark

தசரதன் யாகசாலையினின்று எழுதல்

272.

வாம் பரி வேள்வியும். மகாரை நல்குவது
ஆம் புரை ஆகுதி பிறவும். அந்தணன்
ஓம்பிட முடிந்தபின். உலகு காவலன்
ஏம்பலோடு எழுந்தனன் - யாரும் ஏத்தவே.
 
வாம்பரி    வேள்வியும்- தாவிச் செல்லும் குதிரை வேள்வியான
அசுவமேத யாகத்தையும்:  மகாரை  நல்குவது  ஆம்  புரை ஆகுதி
பிறவும்   -   மக்கட்    பேற்றையளிக்கும்   உயர்ந்த  ஆகுதியையும்
அதற்கேற்ற பிற வழிபாடுகளையும்; அந்தணன் ஓம்பிட முடித்தபின்-
கலைக்கோட்டு  முனிவன்  செய்து  முடித்தபின்;  உலகு  காவலன் -
நாடாளும்  வேந்தனாகிய  தயரதன்;  யாரும் ஏத்தவே  ஏம்பலோடு
எழுந்தனன் - எல்லோரும் போற்றும்படி மகிழ்வோடு எழுந்தான்.

வேள்வி   முடிந்தபின் மன்னன் வேத்தவைக்கு வருதலைக் கூறுவது
இப்பாட்டு.  வாம் + பரி: வாவும் என்பதன் இடை குறைத்து வாம்  என
நின்றது.   வாவுதல்.   தாவிச்  செல்லுதல்.  மகார்:   புத்திரர்   (மகன்
என்பதன்   பன்மை).   புரை:   உயர்ச்சி.  ஓம்பிட:   ‘இடு’   ஆற்றல்
உணர்த்தும்   துணைவினையாம்;   காவலன்:   காத்தலின்   வல்லவன்.
ஏம்பல்: மகிழ்ச்சி.

அந்தணன்     ஆகுதி  முடித்தபின்  -  காவலன்  யாரும்  ஏத்த
எழுந்தனன் என்பது முடிவு. பரி வேள்வி: அசுவமேத  யாகம்.  பிறவும்:
மகவருள் ஆகுதியுடன் தொடர்புடைய பிற  பூசனைகளாம்.  அந்தணன்:
செந்தன்மையுடைய கலைக்கோட்டு முனிவன்.                    92