திரு அவதாரப் படலம் - 266

bookmark

பூதம் சுதைப் பிண்டத்துடன் எழுதல்

266.

ஆயிடை. கனலின்நின்று. அம் பொன் தட்டம் மீத்
தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று. - சூழ்
தீ எரிப் பங்கியும். சிவந்த கண்ணும் ஆய்.
ஏயென. பூதம் ஒன்று எழுந்தது - ஏந்தியே.
 
ஆயிடை   கனலின்  நின்று  -  அப்போது  அந்த  வேள்வித்
தீயிலிருந்து; தீ எரிப்பங்கியும் சிவந்த  கண்ணுமாய்  -  தீ எரிவது
போன்ற தலை மயிரும் சிவந்த கண்ணும் உடையதாக; பூதம் ஒன்று -
ஒரு   பூதமானது;   அம்பொன்  தட்டம்  -  அழகிய  ஒரு பொன்
தட்டத்தின் மேலே; தூய சுதை நிகர் பிண்டம் ஒன்று - தூய்மையான
அமுதத்தை  ஒத்த  ஒரு  பிண்டத்தை;  ஏந்தி  ஏயென எழுந்தது -
தாங்கிக் கொண்டு விரைந்து எழுந்தது.

அ+இடை:     ஆயிடை  (செய்யுள்  விகாரம்).  மீ:  மேலே. சுதை:
அமுதம்.  பிண்டம்: சோற்றுத்திரள் (பொன்தட்டிலே  பாயசத்தை ஏந்தி
அப்பூதம் வந்தது என்பது வான்மீகி கூற்று). பூதம்: தோற்றம்   என்னும்
பொருள்   கொண்ட  வட  மொழிச்  சொல்லாம்.  ஏய்:   ஏய்  எனச்
சொல்வதற்குள்  (ஒரு  அளவைக் குறிப்பு) கம்பர் இச்சொல்லைப்  பல
இடங்களில் எடுத்தாண்டுள்ளார்.                              86