திரு அவதாரப் படலம் - 264

bookmark

தசரதன் வேள்விச்சாலையிற் புகுதல்

264.

முழங்கு அழல் மும்மையும்
   முடுகி. ஆகுதி
வழங்கியே. ஈர்-அறு திங்கள்
   வாய்த்த பின்.
தழங்கின துந்துமி; தா
   இல் வானகம்
விழுங்கினர் விண்ணவர்.
   வெளி இன்று என்னவே.
 
மும்மையும் முழங்கு அழல்- (வேள்வி செய்யத் தொடங்கி) காலை.
பகல் மாலை ஆகிய மூன்று காலங்களிலும்  எழுகின்ற அந்த வேள்வித்
தீயில்;  ஆகுதி  முடுகி  வழங்கி  - அவிப் பொருள்களை விரைந்து
கொடுத்து;  ஈரறு  திங்கள்  வாய்த்த  பின்- பன்னிரண்டு மாதங்கள்
ஆன   பின்பு;   தாவில்  வானகம்  துந்துமிதழங்கின -  குற்றமற்ற
வானத்திலே தேவ வாத்தியங்கள் ஒலித்தன;விண்ணவர் வெளி இன்று
என்ன  விழுங்கினர்  - தேவர்களும்  இடைவெளி இல்லை எனுமாறு
(வானத்தை) மறைத்து நின்றனர்.

முழங்கு     அழல்: ஒலித்து எழுகின்ற வேள்வித் தீ. சதுஷ்டோமம்.
உந்தியம்.  அதிராத்திரம்  ஆகிய  மூன்று வேள்வி மூன்று  நாட்களும்
மூன்று  காலத்தும்  செய்யப்படுவனவாம்.  இவ்வாறு யாகம்  நிறைவேற
ஓராண்டு  சென்றது என்பதால் ‘‘ஈரறு திங்கள் வாய்ந்த பின்’’  என்றார்.
ஆகுதி  வழங்கல்:  அவிப்  பொருள்களை  யாகத்  தீயில்   பெய்தல்
‘‘வெளி   இன்று  என்ன  விழுங்கினர்’’  என்பதற்கு  இடம்  நோக்கி.
விழுங்கினர்: மறைத்தனர் என்று உரை கூறப்பட்டது.

முழங்கு     அழல்:  வினைத்தொகை.  வாய்த்தல்:  பொருந்துதல்.
தழங்குதல்:  ஒலித்தல்.  தாவில்:  குறைதலில்லாத (குற்றமற்ற). ஈர்+அறு:
ஈராறு (பன்னிரண்டு) அஃதாவது ஓராண்டு.                     84