திரு அவதாரப் படலம் - 263

bookmark

தசரதன் வேள்விச்சாலையிற் புகுதல்

262.

ஆயதற்கு உரியன கலப்பை யாவையும்
ஏயெனக் கொணர்ந்தனர்: நிருபர்க்கு ஏந்தலும்.
தூய நல் புனல் படீஇ. சுருதி நூல் முறை
சாய்வு அறத் திருத்திய சாலை புக்கனன்.
 
ஆயதற்கு   உரியன கலப்பை  யாவையும்- அந்த வேள்விக்கு
உரியனவாகிய    பொருள்கள்    எல்லாவற்றையும்;   ஏய்    எனக்
கொணர்ந்தனர்  - ஏய்  என்னும்  அளவிலே பணியாட்கள் கொண்டு
வந்து சேர்த்தனர்; நிருபர் வேந்தனும் - மன்னர் மன்னனான தயரதச்
சக்கரவர்த்தியும்;  தூய நல் புனல் படீஇ - தூய நல்ல நீரிலே நீராடி;
சுருதி   நூல்முறை  சாய்வரத்  திருத்தி - வேத  நூல்  முறைப்படி
குறைவின்றி  அமைக்கப்பட்ட;  சாலைபுக்கனன்  -  வேள்விக்கென்று
அமைக்கப்பட்ட வேள்விச் சாலை அடைந்தான்.

ஆயதற்கு:  ஆய+அதற்கு (அகரம் தொக்கது). கலப்பை: பொருள்கள்
உழு  கலப்பை  எனவும்  கூறுவர்.  ‘ஏய்’ விரைவை உணர்த்தி நின்றது.
ஏந்தல்:   அரசன்.   நிருபர்:   மன்னர்.  படீஇ:  படிந்து  சொல்லிசை
அளபெடை வினையெச்சப் பொருளை உணர்த்தி நின்றது.

சாய்வு+அற:     சாய்வற:  ஒரு  குறையும்  இல்லாமல்  சாய்தல் -
சுருங்குதல்  புக்கனன்:  புகுந்தான். திருத்திய:  செப்பம்  செய்யப்பட்ட
கொணர்ந்தனர்   எவர்?   பணியாட்கள்  -  தோன்றா  எழுவாயாகும்
கலப்பை  என்பதற்குப்  பொருள்கள்  என்ற பொருள்  உடைமையைக்
‘காவினம்   கலனே  சுருக்கினம்  கலப்பை’  என்ற   புறப்பாட்டாலும்
அறியலாம்.

யாவையும்  கொணர்ந்தனர் -  ஏந்தலும்  புனல்  படீஇ  -  சாலை
புக்கனன் என்பது முடிபு.                                   83