திரு அவதாரப் படலம் - 257
தசரதன் கலைக்கோட்டு முனியைத் துதித்தல்
257.
‘சான்றவர் சான்றவ! தருமம். மா தவம்.
போன்று ஒளிர் புனித! நின் அருளில் பூத்த என்
ஆன்ற தொல் குலம் இனி அரசின் வைகுமால்;
யான் தவம் உடைமையும். இழப்பு இன்றாம்அரோ.’
சான்றவர் சான்றவ- பெரியோர்களால் பெரியோனே!; தருமம்
மாதவம் போன்று ஒளிர் புனித - தருமத்தையும். தவத்தையும் போல
ஒளிர்கின்ற புனிதனே!; நின் புகழில் பூத்த - உங்கள் அருளினால்
பரந்து விளங்கும்; என் ஆன்ற தொல்குலம் - பெருமைமிக்க எனது
பழமை வாய்ந்த இந்தச் சூரிய குலம்; இனி அரசின் வைகும்-
(தங்கள் வருகையால்) ஆட்சியில் நிலைபெற்று விளங்கும்; யான்தவம்
உடைமையும் இழப்பின்றாம் - எனது தவம் பொருந்திய தன்மையும்
இழத்தல் இல்லாததாயிற்று.
சான்றவர்: மேலோர் (சால்புடையவர் என்பது கருத்து). ஆல்:
அசை. தருமம் போன்று பரந்த புகழுடைமையாலும். தவம் போன்று
கலங்காது நிலைத்திருந்தலாலும் ‘‘தருமம். மாதவம் போன்றொளிர்
புனித’’ என்றார். பூத்தல்: பெருகல். தவம் உடைமையும் இழப்பின்று -
தவமுடையன் ஆகும் தன்மையிலும் இழப்பில்லை என்பதும்
பொருளாகும்.
இன்று: குறிப்பு வினைமுற்று. இதுவரை மகப் பேறின்மையால்
செய்தவம் இழந்தவனாக எண்ணியிருந்த மன்னன். முனிவரது
வருகையால் மகப்பேறு வாய்க்கும் என்னும் உறுதியால் ‘‘யான் தவம்
உடைமை இழப்பின்று’’ என்றானாகும். அரோ: அசை. சூரிய குலத்தின்
பெருமையும். பழமையும்’’ ஆன்ற தொல்குலம்’’ என்பதால்
புலனாகும். 78
