திரு அவதாரப் படலம் - 248
முனியை எதிர்கொளத் தசரதன் எழுதல்
248.
எழுந்தனன் பொருக்கென. இரதம் ஏறினன்;
பொழிந்தன மலர் மழை. ஆசி பூத்தன;
மொழிந்தன பல் இயம்; முரசம் ஆர்த்தன;
விழுந்தன தீவினை. வேரினோடுமே.
பொருக்கென எழுந்தனன் இரதம் ஏறினான்- தயரதன் விரைவில்
எழுந்து தேரில் ஏறிக் கொண்டான்; மலர் மறை பொழிந்தன -
மலர்கள் மழை போலத் தூவப் பெற்றன; ஆசி பூத்தன - ஆசி
மொழிகள் எழுந்தன; பல் இயம் மொழிந்தன - பல இன்னிசைக்
கருவிகள் இசைத்தன: முரசம் ஆர்த்தன - முரசங்கள் முழங்கின;
தீவினை வேரினோடுமே விழுந்தன -தீவினைகள் வேரொடு அற்று
வீழ்ந்தனவாயின.
மன்னன். முனிவனின் வருகையை எதிர்நோக்கியிருந்தவன்
ஆதலால் வரவேற்க விரைந்தெழுந்தான். தேரேறிச் சென்று முனிவனை
வரவேற்க முந்தினான் என்பது தோன்ற ‘‘பொருக்கென’’ என்றார்.
மலர்மாரி பொழிந்தன. ‘‘ஆசி பூத்தன’’ என்றார் ‘‘பூத்தல்’’
உண்டாதலும். பரந்து செல்லுதலுமாம். ‘‘மொழிந்தன’’ என்றதால்
பலவகை வாத்தியங்கள் முழங்க. அரசனது புகழை மொழிந்தனர்
என்பதும் பொருளாம். மொழிந்தன. பூத்தன. ஆர்த்தன என்று
படர்க்கை வினை கொண்டு முடிந்தது. வியப்பையும் குறிக்கும்
மலர்மழை பொழிதல் முதலிய மங்கலச் செயல்களால் தீவினை
வீழ்ந்தது என்கிறார். 69
