திரு அவதாரப் படலம் - 249
தசரதன் முனிவனைக் காணுதல் (249-251)
249.
‘பிதிர்ந்தது எம் மனத் துயர்ப் பிறங்கல்’
என்று கொண்டு.
அதிர்ந்து எழு முரசுடை
அரசர் கோமகன்
முதிர்ந்த மா தவமுடை முனியை.
கண்களால்.
எதிர்ந்தனன். ஓசனை
இரண்டொடு ஒன்றினே. *
அதிர்ந்தெழு முரசுடை அரசர்கோ மகன் - ஒலித்து ஓங்கும்
முரசத்தை உடைய மன்னர் மன்னனாகிய தயரதன்; எம் மனத்துயர்ப்
பிறங்கல் பிதிர்ந்தது என்று கொண்டு- எமது மனத் துயராகிய மலை
தூளாயிற்று என மனத்தில் கொண்டு; ஓசனை இரண்டொடு ஒன்றின்-
இரண்டுடன் ஒன்றாகிய மூன்று யோசனை (சென்று); முதிர்ந்த மாதவம்
உடை முனியை - முதிர்ச்சியுற்ற பெருந்தவமுடைய முனிவனை;
கண்களால் எதிர்ந்தனன் - தனது கண்களால் தரிசித்தான்.
தனக்கு மக்கட் பேறில்லை என்பதைப் பெருந்துயராக. மலையை
ஒத்த துன்பமாகக் கருதியிருந்தான் என்பதால் ‘‘மனத்துயர்ப் பிறங்கல்’’
என்றான். அத்துயரம் அடியோடு தீர்ந்தது என்பதால் ‘பிறங்கல்
பிதிர்ந்தது‘ என்றான். ‘எம்’ என்றதால் தேவியரையும் நாட்டு
மக்களையும் உட்படுத்திக் கூறினான். என்பது கருத்து. பிறங்குதல்:
வளர்தல். பிதிர்தல்: சிதறுண்டு போதல். ஓங்கி: வளர்ந்து நின்ற
துன்பம் அடியோடு சிதறுண்டு போயிற்று என்பது குறிப்பு. ‘கண்களால்
எதிர்ந்தனன்’ என்று கண்பெற்ற பயன்பெற்றான் என்பதைக்
குறிப்பிடவே ஆம். துயர்ப் பிறங்கல்: உருவகம். எழுமுரசு:
வினைத்தொகை 70
