திரு அவதாரப் படலம் - 242
உரோமபதன் கலைக்கோட்டுமுனியிடம் வரம் இரத்தல்
242.
மன்னர்பிரான் அகன்றதன் பின். வய வேந்தன்.
அரு மறை நுல் வடிவம் கொண்டது
அன்ன முனிவரன் உறையுள்தனை அணுகி.
அடி இணைத் தாமரைகள் அம் பொன்
மன்னு மணி முடி அணிந்து. வரன்முறை செய்-
திட. ‘இவண் நீ வருதற்கு ஒத்தது
என்னை?’ என. ‘அடியேற்கு ஓர் வரம் அருளும்;
அடிகள்!’ என. ‘யாவது?’ என்றான்.
மன்னர் பிரான் அகன்றதன் பின்- அரசர்க்கரசனான தசரதன்
புறப்பட்டு நீங்கிய பிறகு. வயவேந்தன் - வெற்றி பொருந்திய
வேந்தனான உரோமபதன்; அருமறை நுல் வடிவு கொண்டது அன்ன
- அரிய மறைகளே வடிவெடுத்து வந்தது போன்றுள்ள; முனிவரன்
உறையுள் தனை அணுகி - முனிவனான கலைக் கோட்டு முனியின்
இருப்பிடத்தை அடைந்து; அடி இணைத் தாமரைகள் அம்பொன்
மன்னும்முடி அணிந்து - அம்முனிவனது தாமரை போன்ற இரு
பாதங்களையும் அழகிய தனது பொன்முடிக்கு அணியாகுமாறு
வணங்கி. ; வரன் முறை செய்திட - வேண்டிய உபசாரங்களைச்
செய்து நிற்க; ‘நீ இவண் வருதற்கு ஒத்தது என்னை’ என - (முனிவர்
அரசனைப்பார்த்து) நீ இங்கு வந்த காரியம் என்ன என்று கேட்க;
அடிகள் அடியேற்கு ஓர் வரம் அருளும் என யாவது என்றான்
-(அதற்கு மன்னன்) அடிகளே! அடியேனுக்கு ஒரு வரம் தரவேண்டும்
என்று சொல்ல அது என்ன என்றான்.
மன்னர் பிரான்: அரசர் தலைவன் இங்குத் தசரதன். வயம்: வெற்றி.
மறை நுல் மறையாகிய நூல் இரு பெயரொட்டுப் பண்புத் தொகை.
அடித்தாமரை: உருவகம். வரன்முறை: முறைப்படி செய்யும் கடமை
‘அடிகள்’ வணக்கத்துக் குரியவர்களை அழைக்கும் மரியாதைச் சொல்.
முனிவர்களையும். துறவிகளையும் குறிக்கும். “சுவாமி” என்பதை
ஒத்தது. ‘அரிய மறைகளும். நுல்களுமே தவ வடிவம் தாங்கி வந்ததோ
என்னும்படியான தவமுனிவன்’ எனக் கலைக்கோட்டு முனியைக்
கம்பர் சிறப்பித்துக் கூறுவது அம்முனிவனது சிறப்பை உணர்த்தும்.
தயரதன் அகன்றதன்பின் - வேந்தன் - முனிவரன் உறையுள்
அணுகி. அடியிணை முடியணிந்து - வரன்முறை செய்திட - என்னை
என வரமருளும் என - யாவதென்றான் என்பது பொருள் முடிவு.
உரோமபதன் முனிவரது பாதங்களை வணங்கினான் என்பதை
“அடியிணைத் தாமரைகள் அம் பொன்மணி முடி அணிந்து” எனக்
கூறிய நயம் அறிந்து மகிழ்தற்குரியது. 63
