திரு அவதாரப் படலம் - 243

bookmark

உரோமபதன் கலைக்கோட்டு முனியை
அயோத்திக்குப் போய்வர வேண்டுதல்

243.

‘புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை புக்க
   பெருந்தகைதன் புகழில் பூத்த
அறன் ஒன்றும் திரு மனத்தான். அமரர்களுக்கு
   இடர் இழைக்கும் அவுணர் ஆயோர்
திறல் உண்ட வடி வேலான். ‘’தசரதன்’’ என்று.
   உயர் கீர்த்திச் செங்கோல் வேந்தன்.
விறல்கொண்ட மணி மாட அயோத்திநகர்
   அடைந்து. இவண் நீ மீள்தல்!’ என்றான்.
 
புறவு  ஒன்றின் பொருட்டு  ஆக.  துலைபுக்க-  ஒரு  புறாவைக்
காப்பாற்றுவதற்காகத்  தன்னையே   தரத்துணிந்து   தராசுத்தட்டிலேறிய;
பெருந்தகை   தன்   புகழில்  பூத்த   -  பெருந்தகையான   சிபிக்
சக்கரவர்த்தியினது   புகழ்  பொருந்திய   பெருங்குடியில்    தோன்றிய;
அறன்   ஒன்று  திருமனத்தான்  - அறப்பண்பு  பொருந்திய  நல்ல
மனத்தினனும்; அமரர்களுக்கு இடர் இழைக்கும் அவுணர்  ஆயோர்
திறம் உண்ட வடிவேலான் - தேவர்களுக்குத் துன்பம்  தந்த அசுரரின்
வலிமையை   அழித்த   வேலை    உடையவனும்;  தயரதன்  என்று
உயர்கீர்த்தி செங்கோல் வேந்தன்- தயரதன் என்னும் பெயர்கொண்ட
புகழ்மிக்க   செங்கோலுடையவனுமான  வேந்தனது;  விறல்  கொண்ட
மணிமாட  அயோத்தி  நகர்  அடைந்து -  வலிமையை அணியாகக்
கொண்ட   மணிகளால்  இழைத்த    மாளிகைகளையுடைய  அயோத்தி
நகரத்தை அடைந்து; இவண் மீள்தல் என்றான் -  பின் இங்கு மீண்டு
திரும்புதலே   (நான்   வேண்டும்  வரமாகும்)   என்று  உரோமபதன்
சொன்னான்.

புறவு:     புறா. புறாவுக்காகத் தராசில் ஏறிய  சிபி மன்னன் வரலாறு
பிரசித்தம். துலை: துலாக்கோல் (தராசு). புக்க: புகுந்த புகு  என்ற  பகுதி
இரட்டித்து;    காலம்    காட்டியது     (பெயரெச்சம்).    பெருந்தகை:
பண்புத்தொகை;  புகழ்  இல்:  இல்  குடி  அல்லது  குலம்.    பூத்தல்:
உண்டாதல்  அல்லது  பரந்திருத்தல்  என்றும்  கூறலாம்.   இழைத்தல்:
அடிக்கடி  செய்தல்;  உண்ட;  அழித்த.   இதில்  அழிக்கும்   தொழில்
வேலின்   மேலேற்றப்பட்டது.   செங்கோல்:  செம்+ கோல்:   நாட்டை
நன்னெறி நிற்கச் செய்வது. விறல்: வலிமை. மீள்தல்: தொழிற்பெயர்.

துலைபுக்க     -  பெருந்தகையின்  புகழில்   பூத்த  -   மனத்தன்
வடிவேலான்  -  வேந்தன் - நகர் அடைந்து மீள்தல்  என்று  பொருள்
முடிவு காண்க.

முந்திய     பாடலில் வரும் அருளும்  என்று   கேட்ட  மன்னனை
நோக்கி  வரம் யாது என வினவிய முனிவனுக்கு அயோத்தி   அடைந்து
மீள்தலே அவ்வரம் என்றான். உரோமபதன்.                     64