திரு அவதாரப் படலம் - 230
230.
‘வள் உறு வயிர வாள் மன்னன். பல் முறை.
எள்ள அரு முனிவனை இறைஞ்சி. யாரினும்
தள்ள அருந் துயரமும். சமைவும். சாற்றலும்.
உள் உறு வெகுளி போய் ஒளித்ததாம்அரோ.
வள் உறு வயிரவாள் மன்னன்- கூர்மை பொருந்திய வாளை
உடைய அம்மன்னன்: பன்முறை எள்ளரு முனிவனை இறைஞ்சி -
பலமுறையும் இகழ்தற்கரிய அந்த முனிவனை வணங்கி; யாரினும்
தள்ள அரும் துயரமும் - யாராலும் போக்கமுடியாத (மழை
இன்மையாகிய) துன்பத்தையும்; சமையும் - (அத்தகைய துன்பம்
முனிவன் வருகையால்) நீங்கியதனையும்; சாற்றலும் - விரிவாகச்
சொல்லவும்; உள்உறு வெகுளி போய் ஒளித்தது - (அம் முனிவனது)
உள்ளத்தே உண்டான கோபம் நீங்கி மறைந்தது.
வள் உறு: கூர்மை பொருந்திய. ‘யாராலும்’ இகழ்ந்து பேசமுடியாத
நற்குணங்கள் அமைந்தவன் என்பதால் “எள்ளரு முனி” என்றார்.
எவராலும் போக்கமுடியாத துன்பத்தைத் “தள்ளருதுயர்” என்றார்.
சமைவு: நிகழ்ந்தது என்னும் பொருள் உடையது. காட்டில் மழை
இல்லமையால் நேர்ந்த பஞ்சத் துயரையும் அதை நீக்க எவராலும்
இயலாததையும் அம்முனிவனை அங்கு வருமாறு மேற்கொண்ட
முயற்சியையும் அதனால் மழைபெய்ததான அப்போது நடந்ததையும்
மன்னம் கூறினான் என்பது தோன்ற “சமைவும்” என்றார். உள்ளத்தே
ஊன்றிய சினத்தை ‘உள் உறு வெகுளி’ என்றார் சாற்றல்:
விரித்துரைத்தல். ஆம். அரோ: அசைகள். 51
