திரு அவதாரப் படலம் - 231

bookmark

231.

‘அருள் சுரந்து. அரசனுக்கு ஆசியும் கொடுத்து.
உருள் தரும் தேரின்மீது ஒல்லை ஏறி. நல்
பொருள் தரும் முனிவரும் தொடரப் போயினான்-
மருள் ஒழி உணர்வுடை வரத மா தவன்.
 
அருள்     சுரந்து- (உள் எழுந்த  சினம் நீங்கிய   அம்முனிவன்)
அருளைச்   சுரந்து;   அரசனுக்கு  ஆசியும்   கொடுத்து -   அந்த
வேந்தனுக்கு ஆசியும் கூறி; உருள் தரும் தேரின் மீது ஒல்லை  ஏறி-
உருண்டு  செல்லும்  தேரின்  மீது  விரைந்தேறி;  நல்பொருள் தரும்
முனிவரும்  தொடர - நல்ல கருத்துகளையே எப்போதும்  தரும் மற்ற
முனிவர்களும் பின்வர; மருள் ஒழி உண்ாவு உடை -  மயக்கம் நீங்கிய
நல்லுணர்வுடைய; வரத மாதவன் போயினான் - யாவருக்கும்  வரந்தர
வல்ல தவத்தையுடைய கலைக்கோட்டு முனிவன் சென்றான்;

போயினான்: நகரை நோக்கிச் சென்றான். சினம்  நீங்கி  உண்மையை
உணர  அருள்  பெருகும்  என்பதால்  “அருள்  சுரந்து”    என்றான்.
ஆசியும் என்பதில் உள்ள “உம்” எண்ணுப் பொருள் தந்து நின்றது.  52