திரு அவதாரப் படலம் - 227

bookmark

227.

‘என்று எழுந்து. அரு மறை முனிவர் யாரொடும்
சென்று. இரண்டு ஓசனை சேனை சூழ்சேர.
மன்றல் அம் குழலியர் நடுவண். மா தவக்
குன்றினை எதிர்ந்தனன் - குவவுத் தோளினான்.
 
என்று   குவவுத்  தோளினான்  -  என்று   நினைத்த.  திரண்ட
தோள்களை  உடைய அந்த மன்னன் (உரோமபதன்); சேனை  சூழ்தர
எழுந்து  -  நாற்பெரும்  படையும்  தன்னைச்  சூழ்ந்து   வர எழுந்து
(புறப்பட்டு);  அருமறை முனிவர் யாரொடும் - அரிய   வேதங்களைக்
கற்ற முனிவருடன்; இரண்டு யோசனை சென்று - இரண்டு  யோசனை
தூரம்  எதிர் சென்று;  மன்றல்  அம் குழலியர் நடுவண் -  மணமும்
அழகும்  உடைய  கூந்தலை  உடையவர்களான பெண்களின்   நடுவே;
மாதவக் குன்றினை எதிர்ந்தனன் - சிறந்த தவமலை போன்றவளாகிய
கலைக் கோட்டு முனிவனைக் கண்டான்.

அருமறை:  அரிய வேதம்; சூழ்தர-  சுற்றிலும் வர.  மாதவக் குன்று:
உருவகம்.  நிலையில்  திரியாது அடங்கியவனாதலின் ‘மலை’   என்றார்.
மாதவக்  குன்று  வர.  மழை  பொழிந்தது  அதனால் மனம்   மகிழ்ந்த
மன்னனை.   “குவவுத்  தோளினான்” என்றதன் நயம்   உணரத்தக்கது.
மன்றல்:  மணம்.  குழலினர்:  கூந்தலை  உடையவர்கள்.    யாரொடும்:
யாவருடனும்.                                              48