திரு அவதாரப் படலம் - 228

bookmark

228.

‘வீழ்ந்தனன் அடிமிசை. விழிகள் நீர் தர;
“வாழ்ந்தனெம் இனி” என. மகிழும் சிந்தையான்.
தாழ்ந்து எழு மாதரார்தம்மை நோக்கி.  “நீர்
போழ்ந்தனிர் எனது இடர். புணர்ப்பினால்” என்றான்.
 
விழிகள்   நீர் தர-  (அம்முனிவனைக் கண்ட   மன்னன்) கண்கள்
ஆனந்தக் கண்ணீர் சொரிய; அடிமிசை வீழ்ந்தனன் -  அம்முனிவரின்
திருவடிகளில்  வணங்கி  எழுந்து;  இனி  வாழ்ந்தனம்  என -  இனி
யானும்  எனது  நாட்டு  மக்களும்  வாழ்வு  பெற்றோம்   என்று  கூறி;
மகிழும்    சிந்தையான் - மகிழ்ச்சிமிக்க மனத்தையுடைய  மன்னவன்;
தாழ்ந்து எழு மாதரார் தம்மை நோக்கி- தன்னை வணங்கி  எழுந்து
நிற்கும்  அந்தப்  பெண்களைப்  பார்த்து; நீர் புணர்ப்பினால்  எனது
இடர் போழ்ந்தனிர் என்றான்- நீங்கள் உங்கள் உபாயத்தினால் எனது
பெருந்துன்பத்தைப் போக்கிவிட்டீர்கள் என்று கூறினான்

வீழ்தல்:     அடிவீழ்தலாம்.    மிசை:    ஏழனுருபு   வாழ்ந்தனம்:
உளப்பாட்டுத்  தன்மைப்பன்மை  வினைமுற்று.   அம்  என்பது விகுதி.
பிறர்க்கு   வரும்   துன்பத்தையும்  தனக்கு   வந்ததாக   நினைக்கும்
பண்புடையவன் என்பதால் ‘எனதிடர்’ என்றான்.

முனிவரின்     திருவடிகளில்  வீழ்ந்து  வணங்கி  எழுந்த மன்னன்
‘தங்கள்   வரவால்  வாழ்வு  பெற்றோம்’   என்று  கூறி   மகிழ்ந்தான்.
தன்னை  வணங்கிய பெண்களைப் பார்த்து. ‘உங்கள்  செயலால்  எனது
துன்பத்தைப் போக்கினீர்கள்’ என்று கூறினான்.                   49