திரு அவதாரப் படலம் - 224
224.
‘வளநகர் முனிவரன் வருமுன். வானவன்
களன் அமர் கடு எனக் கருகி. வான் முகில்.
சளசள என மழைத் தாரை கான்றன-
குளனொடு நதிகள் தம் குறைகள் தீரவே
முனிவரன் வளநகர் வருமுன்- கலைக் கோட்டு முனிவன் அந்த
வளம் பொருந்திய நகருக்கு வரும் முன்னே; வான்முகில் வானவன்
களன் அமர்கடு எனக் கருகி - பெரு மேகங்கள். சிவபிரானுடைய
கழுத்தில் தங்கியுள்ள நஞ்சு போலக் கருநிறம் கொண்டு.; குளனொடு
நதிகள்தம் குறைகள் தீர - குளங்களும். ஆறுகளும் குறை தீரும்
படியாக; மழைத்தாரை சளசள எனக் கான்றன - மழைத் தாரைகளைச்
சளசள என்ற ஒலியுடன் பொழிந்தன.
வருமுன்: வருமளவில் (அல்லது வருவதற்கு முன்னமே) முன்:
காலம். வானவன்: பெரியோன் (சிவபிரான்). களவன்: கழுத்து. கடு:
நஞ்சு குறைகள் தீர. நீரில்லாமையாகிய குறை நீங்க. குளன்: ( ம-ன-
போலி). சளசள: ஒலிக் குறிப்பு. கான்றன: சொரிந்தன. முனிவன்
நகருக்கு வருவதற்கு முன்னே மழை பொழிந்தது என்பது கருத்து. 45
