திரு அவதாரப் படலம் - 223

bookmark

223.

‘விம்முறும் உவகையர். வியந்த நெஞ்சினர்.
“அம்ம! ஈது. இது ”  என. அகலும் நீள் நெறி. 
செம்மையின் முனிவரன் தொடரச் சென்றனர்:-
தம் மனம் என மருள் தையலார்களே.
 
விம்முறும்      உவகையர்  -  விளங்கிப்   பெருகும்  மகிழ்ச்சி
உடையவராயும்;   வியந்த   நெஞ்சினர்  -   பெருமிதங்   கொண்ட
மனத்தினராயும்  உள்ள; மருள்  தையலார்கள் - மருண்ட  கண்களை
உடைய  அம்மாதர்கள்;  செம்மையின் முனிவரன் தொடர -  சிறந்த
அம்முனிவன்  அவர்களைத்  தொடர்ந்து  வர; அகலும் நீள்  நெறி -
அகன்று  நீண்ட  அந்த  வழியிலே;  அம்ம ஈது ஈது என -  எங்கள்
இருப்பிடம் இதுதான் இதுதான் என்று; தம்மனம் எனச்  சென்றனர் -
வேகமாகச் செல்லும் தமது மனம் போலச் சென்றார்கள்.

விம்முதல்:     விளங்கிப்  பெருகுதல்.   அம்ம    வியப்புக்குறிப்பு.
வியத்தல்:   எவராலும்   இயலாத  செயலைச்   செய்தோம்    என்னும்
பெருமிதம்  அடைதல்.  மனம்  என:  மனத்தின்  வேகத்தைப்  போல.
மருள்:  கண்  இயல்பு. தையல்: அழகு. நீள்  நெறி: நீண்ட வழி.  எமது
இருப்பிடம்  ‘இதுதான்  இதுதான்’ என்று சொல்லிக்  கொண்டே  நீண்ட
வழியிலே அம்முனிவரை அழைத்துக் கொண்டு தமது மனம்  போலவே
வேகமாகச் சென்றனர் அம்மகளிர் என்பது கருத்து.                44