திரு அவதாரப் படலம் - 218

bookmark

218.

ஓசனை பல கடந்து. இனி ஓர் ஓசனை
ஏசு அறு தவன் உறை இடம் இது என்றுழி.
பாசிழை மடந்தையர். பன்னசாலை செய்து.
ஆசு அறும் அருந் தவத்தவரின் வைகினார்.
 
ஓசனை     பல  கடந்து- (மன்னனிடம்   விடைபெற்றுச்  சென்ற
அப்பெண்கள்)  பல  ஓசனை  கடந்து சென்று; ஏசு  அறுதவன் உறை
இடம்-  குற்றமற்ற  தவ முனிவன் வாழும் இடம்  இதுவாகுமென; இனி
ஓர்  ஓசனை  என்றுழி-  இனி  ஒரு யோசனை தூரம்  தானிருக்கிறது
என்று  கூறப்படும்  இடத்தில்;  பன்ன சாலை செய்து-  தழை. குழை.
கொம்புகளால்  உறைவிடமமைத்து;  பாசு இழை  மடந்தையர்-  பசிய
அணிகலன்களை     அணிந்த    அப்பெண்கள்;   ஆசு     அரும்
அருந்தவத்தவரின்-குற்றமறுத்த அரிய தவத்தினர் போல;  வைகினார்-
அங்கு வாழத் தொடங்கினர்.

ஓசனை:     யோசனை.  ஏசு+அறு:   ஏசறு:   பிறரால்   பழிப்பற்ற.
“பழிப்பதொழித்து”   என்ற   குறள்    ஒப்பிடத்தக்கது.  உழி:   இடம்.
பசுமை+இழை:  பாசிழை:  பசுமையான  அணிகலன்கள்.    பன்னசாலை:
இலைக்குடில்  அரசனைத் தொழுது. தேரேறிச் சென்ற  அம்மகளிர்  பல
யோசனை  தூரம்  கடந்து- முனிவனிருக்குமிடத்திற்கு  ஒரு   யோசனை
தூரம்   தானுள்ள  தென்னுமிடத்தில்  உறைவிடம்  அமைத்து-    தவ
முனிவர்களைப் போல வாழலானார் என்பது கருத்து.              39