திரு அவதாரப் படலம் - 214

bookmark

கலைக்கோட்டு முனியின் வரலாற்றை வசிட்டன் கூறுதல் (214-235)

214.

‘புத்து ஆன கொடு வினையொடு அருந் துயரம்
   போய் ஒளிப்ப.- புவனம் தாங்கும்
சத்து ஆன குணம் உடையோன். தயையினொடும்
   தண் அளியின் சாலை போல்வான்.
எத்தானும் வெலற்கு அரியான். மனுகுலத்தே
   வந்து உதித்தோன். இலங்கும் மோலி
உத்தானபாதன்.- அருள் உரோமபதன்
   என்று உளன். இவ் உலகை ஆள்வோன்;
 
புத்தான கொடுவினை யோடு- புற்றுப் போலப்  பெருகும் கொடிய
வினைகளும்  அவற்றால்  விளையும்;  அருந்துயர்  போய்  ஒளிப்ப-
அரிய  துன்பங்களும்  சென்று  நீங்க;  புவனம் தாங்கும்-  நாட்டைக்
காத்து   ஆட்சி   புரியும்;   சத்தான  குணம்   உடையோன்-  மிக
உண்மையான  குணம் உடையவனும்; தயையினொடும்  தண்ணளியின்
சாலை    போல்வான்-   தயைக்கும்   தண்ணளிக்கும்    இருப்பிடம்
போன்றவனும்;   எத்தானும்  வெலற்கு  அரியான்-   எம்முறையிலும்
பகைவரால் வெல்ல அரியவனும்; மனு குலத்தே வந்து  உதித்தோன்-
மனுவின் குலத்தில் பிறந்தவனும்  ஆன;  இலங்கும் மோலி  உத்தான
பாதன்-  விளங்கும்  மணிமுடி தரித்த  உத்தான பாதன்  என்னுமரசன்;
அருள்  உரோம  பதன்  என்று-  பெற்ற மகனான  உரோம  பதன்
என்னும்    பெயர்   பெற்ற;  இவ்வுலகை   ஆள்வோன்   உளன்-
இவ்வுலகத்தை எல்லாம் ஆள்கின்ற அரசன் ஒருவன் இருக்கிறான்.

இது     முதல்  21  பாடல்கள்   உரோமபத  மன்னன்   வரலாறு
கூறுவனவாம்.  புத்து: புற்று (புத்தான: புற்றாக  வளர்ந்து  பெருகியுள்ள).
கொடுவினை:  கொடிய வினையாம். சத்: உண்மை.  சாலை:  வழித்தடம்.
மோலி:     மகுடம்.     குணமுடையோன்.    சாலை     போல்வான்.
வெலற்கரியான்.    வந்துதித்தோன்   இவை    உத்தான    பாதனுக்கு
அடைமொழிகள்  உத்தான  பாதன்  மகன்  உரோம  பதன்  ஆவான்.
மனுகுலம்: சுவாயம்பு மனுவின் குலம். கொடு வினை: பண்புத்தொகை. 35