திரு அவதாரப் படலம் - 209
தசரதன் தான் செய்ய வேண்டியதை வினாதல்
209.
என்னமா முனிவன் கூற. எழுந்த பேர் உவகை பொங்க.
மன்னர் மன்னன். அந்த மா முனி சரணம் சூடி.
‘உன்னையே புகல் புக்கேனுக்கு உறுகண் வந்து அடைவது
உண்டோ?
அன்னதற்கு. அடியேன் செய்யும் பணி இனிது அளித்தி’
என்றான்.
என்ன மாமுனிவன் கூற- என்று. மாமுனிவனாகிய வசிட்டன் கூற;
மன்னவர் மன்னன் எழுந்த பேருவகை பொங்க- (அது கேட்ட)
மன்னர் மன்னனாகிய தயரதன் மிகுந்த மகிழ்ச்சி பொங்க (எழுந்து);
மாமுனி சரணம் சூடி - மாபெரும் முனிவனாகிய வசிட்டனது
பாதங்களை வணங்கி (தலைக்கு அணியாக அணிந்து); உன்னையே
புகல்புக்கேனுக்கு- தங்களையே அடைக்கலம் அடைந்திருக்கும்
அடியவனாகிய எனக்கு; உறுகண் வந்து அடைவது உண்டோ-துன்பம்
வந்து சேர்தல் உண்டோ? (இல்லை என்றபடி); அன்னதற்கு அடியேன்
செய்யும் பணி இனிது அளித்தி என்றான்- அந்த வேள்வியைச்
செய்வதற்கு அடியவனாகிய நான் செய்ய உரிய பணிவிடையை
இனிதே எனக்குத் தருக என்று கூறினான்.
முனிவன்: உலகப் பற்றற்றவன் (உலகியலின்பங்களை வெறுத்தவன்).
பொங்க. எழுந்த என்பன மகிழ்ச்சி மிகுதியைக் காட்டி நின்றன.
புக்கேனுக்கு: புக்கேன் வினையாலணையும் பெயர். புக்குநின்ற நான்
என்னும் பொருள்தந்து நின்றது. உறுகண்: துயரம். பணி: முதல்
நிலைத் தொழிற் பெயர். வேலை என்னும் பொருள் உடையது.
முனிவன் கூறிய மொழி கேட்ட மன்னன். ‘அந்த வேள்வியைச்
செய்ய நான் செய்ய வேண்டியதைக் கட்டளை இடுங்கள்’ என்று
கூறினான் என்பது கருத்து. 30
