திரு அவதாரப் படலம் - 210

bookmark

கலைக்கோட்டுமுனி யாகம் நடத்தினால் மகப்பேறு உண்டு எனல் (210-213)

210.

‘மாசு அறு சுரர்களோடு மற்றுளோர்தமையும் ஈன்ற
காசிபன் அருளும் மைந்தன். விபாண்டகன். கங்கை சூடும்
ஈசனும் புகழ்தற்கு ஒத்தோன். இருங் கலை பிறவும்
                                       எண்ணின்
தேசுடைத் தந்தை ஒப்பான். திருவருள் புனைந்த மைந்தன.்
 
மாசு     அறு சுரர்களோடு - குற்றமற்ற  தேவர்களுடனே; மற்று
உளோர்தமையும்-  மற்று  முள்ள அசுரர்   முதலானோரையும்; ஈன்று
காசிபன்  அருளும்  மைந்தன்-  பெற்ற தந்தையான  காசிபர்  பெற்ற
குமாரனும்;   கங்கை   சூடும்ஈசனும்  புகழ்தற்கு-   கங்கையாற்றைச்
சடையில்  தாங்கிய சிவபெருமானும் புகழ்ந்து கூறுவதற்கு; ஒத்தோன் -
ஒத்த பெருமையுடயவனும்; இருங்கலை பிறவும் எண்ணில் தேசுடைத்
தந்தை ஒப்பான்- மேலான கலையறிவு போன்றவைகளை  எண்ணினால்
சிறந்த    தனது   தந்தையான    காசிபனை    ஒத்தவனும்   ஆகிய;
விபாண்டகன்-   விபாண்டகன்   என்னும்   முனிவனது;  திருஅருள்
புனைந்த மைந்தன்- திருவருளைப் பெற்றுத்திகழும் புத்திரன்.

இந்தப்பாடல்   குளகம்: அடுத்த பாடலுடன் பொருள்  முடிவுபெறும்.
தேவர்களையும்.   அசுரர்   முதலியோரையும்   பெற்றவர்     காசிபர்.
உபபிரமாக்களில் ஒருவர் இக் காசிபரின் குமாரர்.

விபாண்டகர்     தமது தந்தையைப் போலவே  கலையறிவு மிக்கவர்.
இந்த  விபாண்டகரின் குமாரரே கலைக்கோட்டு முனிவர்  என வசிட்டர்
தயரதனுக்கு முனிவர் வரலாற்றைக்  கூறியதை உணர்த்தும்  பாட்டு இது.
மற்றுளோர்:     தேவர்களல்லாது   மற்றவர்.   இரும்+ கலை: உயர்ந்த
கலைகள்.  கங்கை  சூடுமீசன்:  சிவபிரான்.    சிவனும்  புகழ்தற்கொத்த
பெருமை  யுடையவர்  விபாண்டகர் என்கிறார்.  ஈசன்:  எல்லோருக்கும்
தலைவன்  என்ற  பொருள்  உடையது. இது  முதல் மூன்று  பாடல்கள்
குளகம்.                                                   31