திரு அவதாரப் படலம் - 200
200.
‘மசரதம் அனையவர் வரமும். வாழ்வும். ஓர்
நிசரத கணைகளால் நீறுசெய்ய. யாம்.
கச ரத துரக மாக் கடல்கொள் காவலன்.
தசரதன். மதலைவாய் வருதும் தாரணி.
மசரதம் அனையவர் - கானல் நீரைப்போன்றவர்களாகிய
அரக்கர்களுடைய; வரமும் வாழ்வும்- வரபலத்தையும். வாழ்வையும்;
நிசரத கணைகளால் நீறு செய்ய- எமது குறிதவறாத அம்புகளால்
சாம்பலாக்க (அழிக்க); யாம் கசரத துரகமாகக் கடல் கொள்காவலன்-
யாமே. யானை. தேர். காலாள் என்னும் கடல் போன்ற
நாற்பெருஞ்சேனைகளையுடைய வேந்தனான; தசரதன் மதலையாய்
தாரணிவருதும்- தயரதன் புத்திரனாக உலகத்தில் வந்து
அவதரிக்கின்றோம்.
மசரதம்: பேய்த்தேர் (கானல்நீர்). நிசரதம்: உண்மை. நிசரத கணை:
உண்மையான அம்புகள் (பொய்யாது தாக்கவல்லது). நீறு: சாம்பல். நீறு
செய்தல்: அழித்தலாம். தாரணி: பூமி. பத்துத் தேர் கொண்டு.
தன்னுடன் போர்புரிந்த சம்பானை வென்றவன் என்பதால் “தசரதன்”
என்று பெயர் பெற்றான் என்பர். தசம்: பத்து. ரதன்: ரதங்களை
வென்றவன். வெஞ்சினத்து அவுணர் தேர்பத்தும் வென்றுளேன்”
என்பது தயரதன் தன்னைப் பற்றிக் கூறிக் கொள்வதாகும்.
மதலை: விழுது. புதல்வருக்கு ஆகிவந்தது உவமையாகுபெயர்.
வருதும்: தன்மைப் பன்மை வினைமுற்று யாம் வருதும் என
முடியும். 21
