திருக்குறள் கூறும் மருத்துவம்

bookmark

உற்ற நோயைப் போக்குவதற்குச் செய்யப்படுவது மருத்துவம். அந்நோயைப் போக்குவது மருந்து. மருந்து, மருத்துவத்தின் பகுதி யாகும். மருந்து மட்டும் நோய் தீர்க்கப் பயன்படுவதில்லை. நோயுற் றார்க்கு உற்ற நோய் என்ன வென்று உய்த்துணரும் மருத்துவன் வேண்டும். மருத்துவன் குறிப்பிட்டுரைக்கும் மருந்தை நோயுற் றானுக்கு ஊட்டுகின்ற மருத்துவத் துணைவன் வேண்டும். ஆக மருத்துவம் என்பது நோயாளி, மருத்துவன், மருந்து, மருத்துவத் துணைவன் என்னும் நான்கு பகுதிகளைக் கொண்டது. இதனை மருந்து என்னும் சொல்லால் திருக்குறள் உரைக்கும்.

"உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து" - திருக்குறள்.950

உற்றவன் - நோயுற்றவன்; தீர்ப்பான் - மருத்துவன்; மருந்து - மருத்துவனின் கருவியான நோய்தீர்க்கும் மருந்து; உழைச் செல்வான் - மருத்துவனுக்கும் நோயாளிக்கும் துணையாயிருந்து மருந்தூட்டுபவன் எனப் பொருள் உரைக்கிறது.

கூட்டு மருந்து:

பல மருந்துகளைத் தொகையாகக் குறிப்பிடும் சொல் பழந்தமிழரிடையே காணப்படுகிறது. மருந்துகளைக் குறிக்கும் தொகைச் சொல் வழக்கில் இருந்திருந்ததைக் கொண்டு மருந்தியலின் வளர்ந்த நிலையினை உணரலாம்.

"நிலவரைப்பு" என்பது மருந்தின் தொகைச் சொல். இச்சொல்லைப் பற்றிய கருத்துரை வழங்கிய அடியார்க்கு நல்லார், சல்லிய கரணி" சந்தான கரணி, சமனிய கரணி" மிருத சஞ்சீவினி என்னும் நான்கு மருந்துகளை உள்ளடக்கியதாகக் குறிப்பிடுகின்றார்.

கரணி என்பது அரைப்பு முறையால் செய்யப்படுகின்ற மருந்துகளைக் குறிப்பிடும்.

சந்தான கரணி- அருகிய பெருமருந்தென்பர். இது முறிந்த உறுப்புச் சந்து செய்யும் (இணைக்கும்) மருந்து.

சல்லிய கரணி - வேல்தைத்த புண்ணை ஆற்றும் மருந்து.

சமனிய கரணி - புண்ணின் தழும்பை ஆற்றும் (அ) மாற்றும் மருந்து.

மிருத சஞ்சீவினி - இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்யும் மருந்து.

மேற்கண்ட நான்குவித மருந்துகளின் வினைப்பயனை நோக்கும் போது, தமிழ் மருத்துவம் மிக உயர்ந்த நிலையில் இருந்தது தெரிய வருகின்றது. இம்மருந்துகளைப் போன்ற பயனுடைய மருந்துகள் மேலை மருத்துவமான அலோபதி மருத்துவத்திலும், இன்றைய நிலையிலுள்ள எந்த மருத்துவத்திலும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.