திப்பு சுல்தான்
திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனாகல்லி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்), மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டு வரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார். ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு அகற்றுவதற்காக பிரான்சின் மாவீரன் நெப்போலியனுடன் பேச்சுவார்த்தை கூட நடத்தினார். மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில-மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார். மே 4, 1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் போரின் போது இறந்தார்.
திப்புவின் ஆட்சி :-
"கிழக்கிந்திய கம்பெனியின் குலை நடுக்கம் " திப்புவின் மைசூர் அரசைப் பார்த்து லண்டன் பத்திரிகைகள் வியந்தனர்.
"ஆம் நான் அவனைக்கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களை போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன் உதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிர்ஷ்டம்".
என்று கடிதம் எழுதுகிறான் மார்க்வெஸ் வெல்லேச்லி.
"ஆடுகளைப் போல 2௦௦ ஆண்டுகள் பிழைப்பதை விட புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்"
என்று மரணப்படுக்கையில் திப்பு முழங்கினார்.
திப்பு அவர்களின் ஆட்சியின் சிறப்பு :-
அக்காலத்திலேயே கலப்பின விதைகள், உயர்ரகப் பயிர்கள் என்று விவசாயத்தில் பல புதுமைகளைப் புகுத்தினார்.
கப்பல் கட்டும் தளம் அமைத்தார்.
இந்து இஸ்லாமியர் சகோதரத்துவத்தைப் பேணினார்.
இப்போதுள்ள பொது விநியோகத் திட்டம் அவர் ஆட்சியில் அப்போதே செயல்பாட்டில் இருந்தது.
கிராமங்களும் நகரங்களுக்கு சமமான வளர்ச்சியை அடைந்தன.
போரில் ராக்கெட் தாக்குதல்களை பயன்படுத்தினார். இதற்கு சான்றாக, வாலோபஸ் விண்வெளி நிலையத்தில் உள்ள ஒரு சித்திரத்தில் போரில் ஆசியர்கள் ராக்கெட் பயன்படுத்தும் படம் உள்ளதையும் அது மைசூர் போரில் திப்பு சுல்தான் படை ஆங்கிலேயர் மேல் நடத்திய தாக்குதலைக் குறிப்பதையும் இந்தியாவின் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கண்டு வியந்துள்ளார்.
முதல் இராணுவ ஏவுகணைகள்
திப்பு சுல்தானின் ஏவுகணைத் தொழில்நுட்பமே பிற்கால பிரிட்டிஷாரின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் முன்னோடி.
இலண்டன் அருகில் ஊல்ரிச் எனும் ஊரில் உள்ள ரோதுண்டா அருங்காட்சியகத்தில் திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்க இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முயற்சி எடுத்துக் கொண்டார். உலக அளவில் முதல் இராணுவ ஏவுகணைகள் அவையே என்பதையும் பிற்காலத்தில் பிரிட்டிஷார் ஆய்வு நடத்தி அவற்றை திருத்தி அமைத்து பயன்படுத்தியதையும்,மேலும் இது இந்தியாவில் திப்பு சுல்தானின் சொந்த தொழில்நுட்பம் என்பதையும், பிரெஞ்சு நாட்டினரிடம் இருந்து கற்றது அல்ல என்பதினையும் சர் பெர்னார்டு லோவல் எனும் பிரபல பிரிட்டிஷ் விஞ்ஞானி எழுதிய 'விண்வெளி ஆராய்ச்சிகளின் தோற்ற மூலங்களும், பன்னாட்டுப் பொருளாதாரங்களும் (The Origins and International Economics of Space Explorations) எனும் நூலின் உதவியோடு அப்துல் கலாம் நிரூபிக்கிறார்.
காரன் வாலீஸின் சிலை :-
திப்பு சுல்தானுக்கு ஆதரவாக இருந்தவர்களை சூழ்ச்சியாலும், திப்பு சுல்தானை மைசூர் யுத்தத்திலும் தோற்கடித்த காரன் வாலீஸ், ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கையின் படி பணத்திற்காக திப்புவின் இரண்டு மகன்களையும் பணயமாக பிடித்து வைத்துக் கொண்டான். சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் உள்ள காரன் வாலீஸ் சிலையில் சரணடைந்த திப்புவின் மகன்களை தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கும் காட்சி சித்திரிக்கப்பட்டிருக்கிறது. துரோகத்தின் சின்னமாக கருதப்பட்ட இச்சிலை, பொதுமக்களின் எதிர்ப்பால், சென்னையில் ஊர்ப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டு, சென்னை ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.
ஏலம் :-
2015 ஆம் ஆண்டு இவர் பயன்படுத்திய 30 ஆயுதங்கள் லண்டனில் உள்ள போன்ஹாம்ஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் 6 மில்லியன் பவுண்டுகள் வசூலானது.
