தாடகை வதைப் படலம் - 418

bookmark

தேவர் மகிழ்ச்சி

418.

‘யாமும் எம் இருக்கை பெற்றேம்;
   உனக்கு இடையூறும் இல்லை;
கோமகற்கு இனிய தெய்வப்
   படைக்கலம் கொடுத்தி’ என்னா.
மா முனிக்கு உரைத்து. பின்னர்.
   வில் கொண்ட மழை அனான்மேல்
பூமழை பொழிந்து வாழ்த்தி.
   விண்ணவர் போயினாரே.
 
யாமும்  எம் இருக்கை பெற்றேம்-  தேவர்களாகிய    நாங்களும்
இழந்த    எங்கள்   இருப்பிடங்களை  அடைந்துவிட்டோம்;  உனக்கு
இடையூறும்  இல்லை   -   உனக்கோ  அரக்கர்களால்  இனி  எந்த
இடையூறும்  உண்டாக  மாட்டாது;   கோமகற்கு  இனிய   தெய்வப்
படைக்கலம்  கொடுத்தி   என்னா   -   அரசிளங்    குமாரனாகிய
ராமபிரானுக்கு   இனிய   தெய்வத்  தன்மையுடைய  படைக்கலங்களைக்
கொடுப்பாயாக என்று; மாமுனிக்கு உரைத்து - மாபெரும்  முனிவனான
விசுவாமித்திரனுக்குச் சொல்லி; பின்னர். வில்கொண்ட மழை அனான்
மேல்   -   பிறகு.  வில்லை    ஏந்திய   மேகம்   போன்றவனான 
இராமபிரான்மீது; பூமழை பொழிந்து -  மலர்மாரி  பெய்து;  வாழ்த்தி
விண்ணவர் போயினார்-  அவனை வாழ்த்தித் தேவர்கள் சென்றனர்.  

‘யாமும்’     என்பதிலுள்ள ‘உம்மை’ எதிரது தழீஇய  எச்ச உம்மை.
யாம்:   தேவர்களாகிய   யாம்.  இருக்கை:  இருப்பிடம்    (உறையுள்).
பெற்றேம்  என்பது  தன்மைப்பன்மை வினைமுற்று. இடையூறு.   தீங்கு.
கோமகன்:  அரசகுமாரன்.  கொடுத்தி: முன்னிலை ஏவல்   வினைமுற்று
‘விற்கொண்ட  மழை’  இல்பொருள்  உவமையாம்.  பூமழை:  மலர்மாரி.
நாங்களும்   எங்கள்  இடங்களைத்  திரும்பப்   பெற்றோம்.   என்றது.
அரக்கர்கள்  அத்  தேவர்களை  விரட்டி.  அவர்களது    இடங்களைத்
தமக்கு   உரிமையாக்கிக்  கொண்டனர்.  அரக்கர்கள்  இனி   அழிதல்
திண்ணம் என்பதால் ‘யாமும் எம் இருக்கை பெற்றோம்’’ என்றர்.   கால
வழுவமைதி.                                               55