தாடகை வதைப் படலம் - 416
காடுமுழுதும் குருதி பரவுதல்
416.
கான் திரிந்து ஆழி ஆகத்
தாடகை கடின மார்பத்து
ஊன்றிய பகழி வாயூடு
ஒழுகிய குருதி வெள்ளம்
ஆன்ற அக் கானம் எல்லாம்
ஆயினது - அந்த மாலைத்
தோன்றிய செக்கர் வானம் தொடக்கு
அற்று வீழ்ந்தது ஒத்தே!
தாடகை கடின மார்பத்து ஊன்றிய பகழி- அந்த அரக்கியின்
உறுதி வாய்ந்த மார்பில் சென்று ஊன்றிய அம்பாலுண்டான; வாயூடு
ஒழுகிய குருதிவெள்ளம் - புண்ணிலிருந்து ஒழுகிய ரத்தப் பெருக்கு;
கான் திரிந்து ஆழி ஆக - அந்தக் காடே மாறி. கடலாகும்படி;
ஆன்று அக்கானம் எல்லாம் - நிறைந்த அந்தக் காடெல்லாம்;
அந்திமாலை தோன்றிய செக்கர்வானம் - அந்திமாலையில் தோன்றிய
சிவந்த வானம்; தொடக்கு அற்று வீழ்ந்தது ஒத்த ஆயினது -
வானத்தின் சம்பந்தம் நீங்கிக் கீழே வீழ்ந்து கிடந்ததைப்போல்
ஆய்விட்டது.
கான்: காடு. ஆழி: கடல். பகழிவாய்: அம்புபட்டுப்பிளந்த புண்வாய்.
வெள்ளம்: பெருக்கு. ஆன்று: நிறைந்த. செக்கர்வானம்: செவ்வானம்.
இராமபிரானது அம்புபட்ட புண்வாயிலிருந்து பெருகிய ரத்தம்
வெள்ளமாய்ப் பெருகி - அந்தக் காட்டைக் கடலாக்கிவிட்டது.
அந்திமாலையின் சிவந்த வானம் - வானத்தின் தொடர்பு நீங்கி.
கீழேவிழுந்து கிடப்பதைப் போல அந்தக்காடு காணப்பட்டது என்பது
கருத்து. 53
