தாடகை வதைப் படலம் - 417

bookmark

கூற்றுவன் அரக்கர் குருதிச்சுவை அறிந்தான் எனல்

417.

கான் திரிந்து ஆழி ஆகத்
   தாடகை கடின மார்பத்து
ஊன்றிய பகழி வாயூடு
   ஒழுகிய குருதி வெள்ளம்
ஆன்ற அக் கானம் எல்லாம்
   ஆயினது - அந்த மாலைத்
தோன்றிய செக்கர் வானம் தொடக்கு
   அற்று வீழ்ந்தது ஒத்தே!
 
தாடகை  கடின  மார்பத்து  ஊன்றிய பகழி- அந்த  அரக்கியின்
உறுதி   வாய்ந்த  மார்பில் சென்று ஊன்றிய அம்பாலுண்டான; வாயூடு
ஒழுகிய  குருதிவெள்ளம்  - புண்ணிலிருந்து ஒழுகிய ரத்தப் பெருக்கு;
கான்  திரிந்து  ஆழி  ஆக  -  அந்தக்  காடே மாறி. கடலாகும்படி;
ஆன்று   அக்கானம்  எல்லாம் -  நிறைந்த  அந்தக்  காடெல்லாம்;
அந்திமாலை தோன்றிய செக்கர்வானம் - அந்திமாலையில் தோன்றிய
சிவந்த வானம்; தொடக்கு  அற்று  வீழ்ந்தது  ஒத்த  ஆயினது  -
வானத்தின்   சம்பந்தம்    நீங்கிக்   கீழே  வீழ்ந்து  கிடந்ததைப்போல்
ஆய்விட்டது.

கான்:  காடு. ஆழி: கடல். பகழிவாய்: அம்புபட்டுப்பிளந்த  புண்வாய்.
வெள்ளம்:  பெருக்கு.  ஆன்று: நிறைந்த. செக்கர்வானம்:   செவ்வானம்.
இராமபிரானது   அம்புபட்ட   புண்வாயிலிருந்து   பெருகிய    ரத்தம்
வெள்ளமாய்ப்   பெருகி   -  அந்தக்   காட்டைக்   கடலாக்கிவிட்டது.
அந்திமாலையின்  சிவந்த  வானம்  -  வானத்தின்   தொடர்பு  நீங்கி.
கீழேவிழுந்து  கிடப்பதைப் போல அந்தக்காடு  காணப்பட்டது  என்பது
கருத்து.                                                   53