தாடகை வதைப் படலம் - 412

bookmark

தாடகை மலைகளை வீசுதலும்
இராமன் அவற்றை விலக்குதலும்

412.

அல்லின் மாரி அனைய நிறத்தவள்.
சொல்லும் மாத்திரையின். கடல் தூர்ப்பது ஓர்
கல்லின் மாரியைக் கைவகுத்தாள்; அது
வில்லின் மாரியின். வீரன் விலக்கினான்.
 
அல்லின்  மாரி அனைய நிறத்தவள்-  இருட்டில் பெய்யும்  மழை
போன்ற கரிய  நிறம்  கொண்ட தாடகை; சொல்லும் மாத்திரையின் -
ஒரு   சொல்  சொல்லும்  கால  அளவிலேயே;  கடல்  தூர்ப்பதோர்
கல்லின்   மாரியே  -  கடலையும் தூர்த்துவிடக் கூடியதான  கற்களை
மலைபோல;   கைவகுத்தாள்  -   கைகளால் எடுத்து வீசினாள்; அது
வில்லின்   மாரியின்   வீரன்  விலக்கினான்  -  அதனை.  தனது
வில்லிலிருந்து   பொழியும்  அம்பு   மழையினால்   வீரனாகிய  ராமன்
விலக்கலானான்.

அல்:   இருட்டு.  மாரி:  மழை.  இருட்டில் பெய்யும் மழை. அல்லது
இருளாகிய   மழை   எனவும்   தகும்.   தாடகையின்  கரிய  நிறத்தை
இவ்வாறு கூறினார். மாத்திரை: கால   அளவு. கைவகுத்தல்: கைக்கடுமை
காட்டல்.  ‘வில்லின்  மாரி’  இதில்   ‘மாரி’  உவமை  ஆகு  பெயராய்
அம்புகளை   உணர்த்தும்.    வீரன்:   வீரம்  மிக்கவன்.  தாடகையின்
கொடிய   தோற்றம்   கண்டும்    அவளது    போர்ச்செயல்  கண்டும்
வீரத்துடன்  போர்  புரியும்  திறத்தைக்   காட்டும்.   தாடகையின்  கல்
மழையை. இராமபிரானது அம்புமழை தடுத்தது என்பது கருத்து.      49