தாடகை வதைப் படலம் - 409
தாடகை இராமன்மேல் சூலத்தை வீசுதல்
409.
கங்கைத் தீம் புனல் நாடன் கருத்தை. அம்
மங்கைத் தீ அனையாளும் மனக்கொளா.
செங் கைச் சூல வெந் தீயினை. தீய தன்
வெங் கண் தீயொடு மேற்செல வீசினாள்.
கங்கைத் தீம்புனல் நாடன் கருத்தை- கங்கையின் இனிய நீர்
பாய்ந்து வளப்படுத்தும் கோசல நாட்டை உடைய இராமபிரானது
எண்ணத்தை; அம்மங்கைத் தீ அனையாளும் மனக்கொளா - அந்த
நெருப்பைப் போன்ற தாடகையை மனத்தில் கொண்டு; செங்கைச் சூல
வெம்தீயினை - தனது சிவந்த கையிலுள்ள சூலமாகிய கொடிய
நெருப்பினை; தன் வெம் கண்தீயொடு - தனது கொடிய
கண்களிலிருந்து சொரியும் நெருப்புடன்; மேல்செல வீசினான் - ராமன்
முதலிய மூவர் மேலும் சென்று படும்படி எறிந்தாள்.
தீம்புனல்: இனிய நீர். புனல்நாடு: மருதநிலம். தன் கண் தீயுடன்
எறியும் தாடகையின் சூல வெந்தீயினை அவிக்கும் ஆற்றலுடைய
இராமனது சிறப்புத் தோன்ற ‘’கங்கைத் தீம்புனல் நாடன்’’ என்றார்.
நாடன்: நாட்டை உடையவன். உயிர்களைக் கொல்வதால் ரத்தக்கறை
படிந்த கைகளை உடையவளாதலின் ‘’செங்கை’’ என்றார். கொளா:
கொண்டு (செயா என்ற வாய்பாட்டு வினைஎச்சம்). செம்மை:
சிவப்புமாம். வெம்மை: வெப்பம். 46
