தாடகை வதைப் படலம் - 399
ஆடவர்க்கும் தாடகைக்கும் வேறுபாடின்றெனல்
399.
‘இந்திரன் இடைந்தான்; உடைந்து ஓடினார்.
தந்திரம் படத் தானவர். வானவர்;
மந்தரம் இவள் தோள்எனின். மைந்தரோடு.
அந்தரம் இனி யாதுகொல். ஆண்மையே?
இந்திரன் இடைந்தான் - இந்திரன் இவளுடன் எதிர்க்கவந்து
பின்னிட்டு ஓடினான்; தானவர் வானவர் - அரக்கர்களும்
தேவர்களும்; தந்திரம்பட உடைந்து ஓடினர் - தமது சேனைகள்
அழிய. சிதறி ஓடிவிட்டார்கள்; இவள் தோள் மந்திரம் எனின் -
இவளது தோள்கள் மந்தர மலை போன்றது என்றால்; மைந்தரோடு
ஆண்மை இனி அந்தரம்யாது - தக்க ஆண்களோடு ஆண்மையில்
என்ன பேதம் இருக்கிறது?
இடைந்தான்: பின்னிட்டான் (பின்வாங்கினான்). உடைந்து: சிதறி.
தந்திரம்: படை. பட: அழிய. மந்திரம்: மந்தரமாலை. மைந்தர்:
வலிமையுடை ஆண்கள். அந்தரம்: வேறுபாடு (பேதம்). பெண்ணாகிய
இவளுக்கும். வலிமைமிக்க ஆண்களுக்கும் என்ன வேறுபாடிருக்கிறது?
இந்திரன் முதலானோரும் தோற்று ஓடும்படி செய்த இவளைப் பெண்
என நினைக்கலாமா. 40
