தாடகை வதைப் படலம் - 390

bookmark

தாடகை சினத்தோடு விழித்துப் பார்த்தல்

390.

இறைக்கடை துடித்த புருவத்தள்.
   எயிறு என்னும்
பிறைக் கடை பிறக்கிட மடித்த
   பில வாயள்.
மறைக் கடை அரக்கி. வடவைக் கனல்
   இரண்டு ஆய்
நிறைக் கடல் முளைத்தென.
   நெருப்பு எழ விழித்தாள்.
 
இறை. கடைதுடித்த புருவத்தள்- சிறிது  கடைப்பாகம்  துடிக்கின்ற
புருவத்தை  உடையவளும்; எயிறு  என்னும் பிறை கடை பிறக்கிட -
பற்கள்   என்னும்   சந்திரப்   பிறைகள் கடைப்பகுதி விளக்கமுறும்படி;
மடித்த  பிலவாயள்  -  மடித்துக்  கொண்ட.  குகை போன்ற  வாயை
உடையவளுமான;  மறைக்  கடை  அரக்கி  - மறை நெறியின் வரம்பு
கடந்த  அரக்கியான  அந்தத்  தாடகை; வடவைக்கனல் இரண்டாய் -
வடவைத் தீ  இரண்டு  கூறாகி;  நிறைக்கடல்  முளைத்தென  -  நீர்
நிறைந்த   கடலில்  முளைத்தது என்று கூறும்படி வந்து; நெருப்பு எழ
விழித்தாள் - கண்களில் நெருப்பு எழும்படி விழித்துப் பார்த்தாள்.

பிறக்கிட:  பிறவினை.  எயிறு:  பற்கள்.  மறை   நெறி   கடந்தவள்
என்பதால்  ‘மறைக்  கடையரக்கி’ என்றார். ‘நிறைக்கடல்’   தாடகையின்
உடலுக்கும்.   ‘வடவைக்  கனல்  இரண்டு’.  அவளது    கண்களுக்கும்
உவமையாயின.   சினத்தால்   புருவங்களின்   கடைதுடிக்க.    பற்கள்
என்னும்   பிறைமதி   பிறங்க.   மடித்த   குகை   போன்ற   வாயை
உடையவளாய்   -   வடவைத்தீ  இருகூறாகிக்  கடலில்   தோன்றியது
போன்ற  கண்களை  உடையவளாய்  நெருப்பெழ  விழித்தாள்  என்பது
பொருள். இல்பொருள் உவமை (வடவைக் கடல் இரண்டு).          31