தாடகை வதைப் படலம் - 391

bookmark

தாடகை ஆர்ப்பரித்தல்

391.

கடம் கலுழ் தடங் களிறு
   கையொடு கை தெற்றா.
வடம் கொள. நுடங்கும் இடையாள்.
   மறுகி வானோர்
இடங்களும். நெடுந் திசையும்.
   ஏழ் உலகும். யாவும்.
அடங்கலும் நடுங்க. உரும் அஞ்ச.
   நனி ஆர்த்தாள்
 
கடம்  கலுழ் தடங்களிறு- மதம் பொழிகின்ற பெரிய  யானைகளை;
கையொடு  கை  தெற்றா  -  ஒன்றன் துதிக்கை யோடு. மற்றொன்றன்
துதிக்  கையை முடித்து; வடம் கொள - மாலையாக அணிந்து கொண்டு
இருப்பதால்;   நுடங்கும்   இடையாள்   -   அசைகின்ற  இடையை
உடையவளான  அந்த  அரக்கி; வானோர் இடங்களும் - விண்ணோர்
வாழும் இடங்களும்;  நெடும்திசையும் ஏழுலகும் - நெடிய திசைகளும்.
ஏழு  உலகங்களும்; யாவும் அடங்கலும் நடுங்க - ஆகிய அனைத்தும்
மற்றும்  உயிர்கள்   முழுதும்  மயங்கி  நடுங்கவும்;  உரும் அஞ்சநனி
ஆர்த்தாள் - இடியும் அஞ்சவும் மிகவும் ஆர்ப்பரித்தாள்.

கலுழ்  களிறு: வினைத்தொகை. தெற்றா; தெற்றி.   தெற்றா:  செய்யா
என்ற  வாய்பாட்டு  வினையெச்சம்.  நுடங்குதல்:    அசைதல்.   மறுகி:
கலங்கி.  அடங்கலும்:  முழுவதும்.  நனி: மிக. நனி:  உரிச்சொல்.  மதம்
பொழியும்   யானைகளை   ஒன்றன்   துதிக்கையை      மற்றொன்றன்
துதிக்கையொடு     முடிந்து     தனது     கழுத்தில்      மாலையாக
அணிந்திருக்கிறாள்.    இடை     நுடங்க     நடந்து     வருகிறாள்.
வானுலகங்களும்  திசைகளும்  ஏழுலகங்களும்   மற்ற  யாவும்  நடுங்க:
இடியும்   அஞ்சப்   பெரு  முழக்கம்  செய்தாள்   என்பது    கருத்து.
ஆர்த்தல்: முழங்குதல்.                                     32