தாடகை வதைப் படலம் - 386

bookmark

தாடகை உயிரினத்தையே ஒழித்து விடுவாள் எனல்

386.

‘முன் உலகு அளித்து முறை நின்ற உயிர் எல்லாம்
தன் உணவு எனக் கருது தன்மையினள்; மைந்த!
என் இனி உணர்த்துவது? இனிச் சிறிது நாளில்
மன்னுயிர் அனைத்தையும் வயிற்றின் இடும்’ என்றான்
 
முன்   உலகளித்து  - முற்பட உலகத்துயிர்களை யெல்லாம் காத்து;
முறை நின்ற  உயிரெல்லாம் - (அவ்வாறு காக்கப்பட்டதால்) முறையே
நிலைத்து  நின்ற  உயிர்களை  எல்லாம்;  தன்  உணவு எனக்கருது -
தனது  உணவு பொருள் போலவே என்னும்; ?தன்மையவள் மைந்தா -
தன்மையுடையவள்.  தயரதனது மைந்தனே!; என் இனி உணர்த்துவது -
இனிச்   சொல்லவேண்டியதென்ன  உண்டு;  இனிச்சிறிது  நாளில்  -
இன்னும்  சில  நாட்களி்லே; மன்னுயிர் அனைத்தையும் - நிலைபெற்ற
உயிர்களை  எல்லாம்;  வயிற்றின்  இடும்  என்றான்  -  வயிற்றிலே
போட்டுக்கொள்வாள் என்றான்.

தயரதன்.   மன்னுயிர்.   தன்னுயிர்  எனக்கருதுபவன்.  தாடகையோ
மன்னுயிர்  கொன்று  திரிபவள்  எனத்   தாடகையின்  கொடுமையைத்
தயரதனுடைய  பெருமையைக்   கூறியுணர்த்துவதாக   அமைந்திருப்பது
சிறப்பு.

உலகளித்தல்: பரிபாலித்தல் மன்: பெருமை.                  27