தாடகை வதைப் படலம் - 357

bookmark

357.

பொரி பரல் படர்நிலம் பொடிந்து கீழ் உற
விரிதலின். பெரு வழி விளங்கித் தோன்றலால்.
அரி மணிப் பணத்து அரா - அரசன் நாட்டினும்
எரி கதிர்க்கு இனிது புக்கு இயங்கல் ஆயதே!
 
பொரி  பரல் படர்  நிலம்  -  சூரிய வெப்பத்தால் பொரிந்துள்ள
சிறுகற்கள் எங்கும் விரிந்து கிடக்கும் அந்தப் பாலைவனம்:   பொடிந்து
கீழ் உற விரிதலின் -   பிளவுபட்டு.   பாதளத்துக்  கீழும்  அகழ்ந்து
போயிருப்பதால்; பெருவழி   விளங்கித்  தோன்றலால்  -  பெருத்த
இடைவெளி  விளக்கமாகத்  தோன்றுவதால்; அரி மணிப்பணத்து அரா
அரசன்   நாட்டினும்   -   பொன்னிறமும்.   மணியையும்  உடைய
பாம்பரசனது நாடாகிய  நாகலோகத்தினும்;  எரிகதிர்க்கு  இனிதுபுக்கு
இயங்கல்   ஆயதே   -   எரிந்து   வெப்பம்  வீசும்  சூரியனுடைய
கிரணங்களுக்கும் இதே புகுந்து இயங்கமுடிந்தது.

பொரிபரல்:     பொரிந்த பரல்கற்கள் (வினைத்தொகை). படர் நிலம்:
வினைத்  தொகை.  பொடிதல்:  புழுதியாதல்.  கீழுறவிரிதல்:   கீழ்வரை
வெடித்தல். அரிமணி: உயர்ந்த மணியுமாம். பணம்: படம். அரா   அரசு:
பாம்புகளின்   அரசன்  (ஆதி  சேடன்).  எரிகதிர்:    வினைத்தொகை.
இயங்கல்: சஞ்சரித்தல். ஆயது: ஆகியது.

சூரிய  வெப்பத்தால்  பாலை நிலம் பிளந்து - சூரியனுடைய கதிர்கள்
நுழைந்து சஞ்சரிக்கும்படி இருந்தது என்பது கருத்து.               16