தாடகை வதைப் படலம் - 356
பாலைவனத்தின் பசையற்றநிலை
356.
தா வரும் இரு வினை செற்று. தள்ள அரும்
மூவகைப் பகை அரண் கடந்து. முத்தியில்
போவது புரிபவர் மனமும். பொன் விலைப்
பாவையர் மனமும். போல் பசையும் அற்றதே!
தா வரும் இருவினை செற்று - தாவி வருகின்ற நல்வினை.
தீவினையாகிய இரு வினைகளையும் அழித்து; தள்ள அரும் மூவகைப்
பகை அரண்கடந்து - தள்ளுதற்கு அரிய மூன்று வகைப்பட்ட
உயிர்ப் பகை ஆகிய காவலையும் கடந்து; முத்தியில் போவது
புரிபவர்மனமும் - வீடு பேறடைவதற்குரிய காரியங்களையே செய்யும்
ஞானிகள் மனமும்; பொன் விலைப் பாவையர் மனமும் -
பொன்னுக்குத் தமது மேனியை விலைகூறும் விலை மாதர்களின்
மனமும்; போல் பசையும் அற்றதே - (எவ்வாறு பசையற்றிருக்குமோ
அதுபோல்) இப்பாலை வனமும் பசையற்றுக் கிடந்தது.
தா+வரும்.: தாவிவரும். நல்வினையும் பிறப்புக்குக் காரணம்
என்பதால் இருவினையும் ‘செற்று’ என்றார். மூவகைப் பகையாவது.
காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்றுமாம். இருவினை செற்று
மூவகைப்பகை வென்றவர்களே வீடு பேறடைதற்கு குரியர் என்பதால்
‘முத்தியில் போவது புரிபவர்’ என்றார். ஞானிகள் பற்றற்றவர்கள்.
பாவை: உவமை யாகு பெயர். விலை மாதர் பசையற்றவராதல் -
தம்மை நாடிவந்தவரிடம் இரக்க மற்றிருத்தலாம். எனவே
அப்பாலைநிலம் முத்தியை விரும்பும் ஞானிகளின் மனம் போலவும்
பொன் விலைபாவையர் மனம் போலவும் பசையற்றிருந்தது என்பது
கருத்து. தா: துன்பமும் ஆம். 15
