தாடகை வதைப் படலம் - 354

bookmark

பேய்த் தேரின் தோற்றம்

354.

கானகத்து இயங்கிய கழுதின்
   தேர்க் குலம்.
‘தான் அகத்து எழுதலால்
   தலைக்கொண்டு ஓடிப்போய்.
மேல் நிமிர்ந்து எழுந்திடில்
   விசும்பும் வேம்’ எனா.
வானவர்க்கு இரங்கி. நீர்
   வளைந்தது ஒத்ததே!
 
கானகத்து  இயங்கிய- அந்தக்கொடிய பாலைவனத்திலே  விளங்கித்
தோன்றிய;  கழுதின்  தேர்க்குலம்  -  பேய்த்தேராகிய  கானல்  நீர்;
அகத்து  தான்  எழுதலால் - அப்பாலை வனத்தகத்து வெம்மை தான்
எழுதலாலே;  தலைக்கொண்டு  ஓடிப்போய்  -  (அது)  மிகுதிப்பட்டு
ஓடிச்சென்று; மேல் நிமிர்ந்து எழுந்திடில் - மேலே நிமிர்ந்து எழுந்து
விட்டால்;   விசும்பு  வேம்  எனா  - ஆகாயம் வெந்து போகும்என
நினைத்து;     வானவர்க்கு     இரங்கி     -விண்ணுலகத்தினரான
தேவர்களுக்காக   இரங்கி;   நீர்வளைந்தது   ஒத்ததே  -நீர்க்கடவுள்
(வருணன்)   அந்த   வெப்பத்தை  மேலே செல்லவிடாமல் கீழ்நோக்கிச்
செலுத்தியது போன்றது.

கான்+அகம்:  கானகம் என்ற ஒரு சொல்லாய்க் காட்டை உணர்த்தும்.
கழுது: பேய். கழுதின் தேர்: பேய்த்தேர்  (கானல் நீர்).  குலம்:  கூட்டம்.
தலைகொண்டோடுதல்:  வரம்பு மீறுதலாம். மேல்:  வானம் என்றுமாம்.

அப்பாலை     நிலம்  முழுமையும்  காணப்படும்    கானல்    நீர்
மேலெழுந்தால்   விண்ணையும்   வேகச்செய்யுமே   என  வானவர்க்கு
இரக்கப்பட்டு  நீர்க்கடவுள்  (வருணன்)   பாலை   நிலம்   முழுமையும்
நீரினால்  வளைத்துக்  கொண்டது  போலக்   காணப்பட்டது.  எ ன்பது
கருத்து. இது தற்குறிப்பேற்ற அணியாகும்.                      13