தாடகை வதைப் படலம் - 353
353.
ஏக வெங் கனல் அரசிருந்த. காட்டினில்
காகமும் கரிகளும் கரிந்து சாம்பின;-
மாக வெங்கதிர் எனும் வடவைத் தீச் சுட.
மேகமும் கரிந்து இடை வீழ்ந்த போலுமே.
ஏக வெம்கனல் அரசிருந்தகாட்டினில் - கொடிய கனலே
தனித்தலைவனாக அரசு செலுத்திவரும் பாலைநிலத்திலே; காகமும்
கரிகளும் கரிந்து சாம்பின - வானில் பறக்கும் காக்கைகளும் கானில்
திரியும் யானைகளும் வெந்து உயிரிழந்து கிடந்தன; மாக வெங்கதிர்
எனும் - மிகக் கொடும்கனல் எனக்கூறப்படும்; வடவைத் தீச்சுட
-‘வடவா முகாக்கினி’ நெருப்புச் சுடவே; மேகமும் கரிந்து - வானத்தில்
திரியும் மேகங்களும் வெந்து கருகி; இடை வீழ்ந்த போலும் -
பாலைநிலத்திடையே வீழ்ந்துள்ளன போல (காணப்படுகின்றன).
ஏகம்: ஒன்று. தனிமை. போன்ற பல பொருள் உடைய சொல்.
கனல்: வெப்பம். அரசிருந்து: ஆட்சிபுரிந்து ‘’காகமும்’’ என்று
கூறியதால் விண்ணில் பறக்கும் பறவைக்கூட்டங்களும் ‘கரி’ என்றதால்
மண்ணில்திரியும் விலங்கினங்களும் உபலட்சணத்தால் கொள்ளப்படும்.
மற்றவைபற்றிக் கூறவேண்டாதாயிற்று. கரிதல்: வெந்துருகிப் போதல்.
மாகம்: பெருமை! வடவைத்தீ கடல்நடுவே - குதிரை முகவடிவிலே
இருக்கும் பெரு நெருப்பு ‘ஊழிப்பெருந்தீ’ என உரைப்பர். புராண
வழக்கு. ‘மேகமும்’ என்பதிலுள்ள ‘உம்மை’ தட்பத்தைக் குறிப்பது
எனினும் அதனையும் வேகச்செய்வது கனல் என்ற சிறப்பை
உணர்த்தும் 12
