தாடகை வதைப் படலம் - 346
பாலைநில வருணனை (346-353)
346.
பருதிவானவன் நிலம் பசை
அறப் பருகுவான்
விருது மேற்கொண்டு உலாம்
வேனிலே அல்லது ஓர்
இருது வேறு இன்மையால்.
எரி சுடர்க் கடவுளும்
கருதின். வேம் உள்ளமு;
காணின். வேம் நயனமும்.
பருதி வானவன் நிலம் பசை அறப்பருகுவான்- ?சூரிய தேவன்
நிலத்தின் ஈரத்தை மிகுதியாகப் பருகும் பொருட்டு; விருது
மேற்கொண்டு உலாம் - வெற்றியை மேற்கொண்டு உலாவும்; வேனிலே
அல்லது இருது வேற இன்மையால் - வேனிற் காலமேயல்லாது
(அந்நிலத்தில்) வேறுகாலம் இல்லாமையால்; எரிசுடர்க் கடவுளும்
கருதின் - நெருப்புத் தேவனும்கூட இப்பாலையின் வெப்பத்தை
எண்ணுவானானால்; உள்ளமும் வேம் - அந்தத் தீக்கடவுளின்
இதயமும் வெந்து போகும்; காணின் நயனமும் வேம் -
இப்பாலையைக் கண்டுவிட்டால் கண்களும் வெந்து போகும்.
பின் இரண்டடிகள் உயர்வு நவிற்சி யணியாகும். பருதிவானவன்:
சூரிய தேவன். பசை: ஈரம். விருது: வெற்றி. உலாம்: உலாவும்
என்பதன் இடைக் குறை. இருது: ருது: பருவம் என்பது பொருள்.
வேம்: வேகும் என்பதன் மரூஉ.
சூரியன் நிலத்தின் ஈரம் முழுவதையும் பருகுவேன் எனச்
சூளுரைத்து- உலாவுகின்ற அப்பாலை நிலத்தில் வேனில்காலம் தவிர.
வேறுபருவமே இல்லாமையால் - அந்தப்பாலையின் வெப்பம் பற்றி
நினைக்கும் தீக்கடவுளின் மனமும் வெந்துபோகும் பார்த்த கண்களும்
வெந்துபோகும் என்பது கருத்து. இது முதல் 12 பாடல்கள் பாலை
நிலத்தின் தோற்றத்தையும் தன்மையையும் கூறுவனவாம். 5
