தாடகை வதைப் படலம் - 344

bookmark

காமனாச்சிரமத்தின் பெருமை

344.

‘பற்று அவா வேரொடும் பசை அற.
   பிறவி போய்
முற்ற. வால் உணர்வு மேல்
   முடுகினார் அறிவு சென்று
உற்ற வானவன். இருந்து யோகு
   செய்தனன் எனின்.
சொற்றவாம் அளவதோ. மற்று
   இதன் தூய்மையே?’
 
பற்று அவா வேரொடும் பசை அற-   உலகப்    பொருள்களில்
பற்றியுள்ள ஆசை வேரொடு பற்றற்றுப் போகவும்; பிறவி போய் முற்ற
-  அவ்வாசையின்  பயனாய்   வரும்  பிறவி நோய் சென்று முடியவும்;
வால் உணர்வு  மேல்  -  மெய்யுணர்வு  பெற்ற; முடுகினார் அறிவு
- விரைந்து சென்று  அடைகின்ற ஞானிகளின் ஆன்மஞானம்; சென்று
உற்றவானவன் -  சென்று அடைகின்ற இறைவனாகிய சிவபெருமானே;
இருந்து  யோகு செய்தனன்  எனில்  -  இங்கிருந்து  யோகத்தைச்
செய்தான் என்றால்; இதன் தூய்மை சொற்றலாம் அளவதோ- இதன்
தூய்மை சொல்லத் தக்க அளவுடையதாகுமோ? ஆகாது.

அவா வேரொடும் பசையறுதல்: ஆசை வேருடன் பற்றறுதல். போய்
முற்றல்: முற்றிப்  போதல். வால் உணவு: மெய்யறிவு. யோகு:   யோகம்
(கடைக்குறை).  அளவது;   அளவுடையது.   சிவபெருமான்   ஆன்ம
ஞானிகளுக்குத் தலைவன் என்றபடி.

உலகப்  பொருள்களின் மீதுள்ள பற்று ஒழிந்தால் - அந்தப் பற்றுக்
காரணமாக  வரும்  பிறவிதீரும்  -  பிறவி  நீங்க  ஆன்ம    ஞானம்
உண்டாகும். அந்த   ஞானத்தால்  இறைக்காட்சி  பெறலாம் என்பதால்
‘’வாலுணர்வு மேல்வர முடுகினார்  அறிவு  சென்றுற்ற வானவன்’’ எனச்
சிவபெருமானைச் சிறப்பித்துக் கூறினார்.  அவன்  இருந்து  தவம்செய்த
இடமாதலின் இதன் தூய்மை சொல்ல இயலாததென்றார்.           3