தாடகை வதைப் படலம் - 345

bookmark

விசுவாமித்திரன் இராமன் இலக்குவன்
மூவரும் சுரஞ் சார்தல்

345.

என்று. அ(வ்) அந்தணன் இயம்பலும்.
   வியந்து. அவ் வயின்
சென்று. வந்து எதிர் எழும்
   செந் நெறிச் செல்வரோடு
அன்று உறைந்து. அலர் கதிர்ப்
   பரிதி மண்டலம் அகன்
குன்றின்நின்று இவர. ஓர்
   சுடு சுரம் குறுகினார்.
 
என்று   அவ்  அந்தணன்  இயம்பலும்  -  என்று அம்முனிவர்
சொல்லவே;  வியந்து  சென்று - இராம. இலக்குவர் ஆச்சரியப்பட்டுப்
போய்;  உவந்து எதிர்எழும் - மகிழ்ந்து. எதிர்கொண்டழைக்க எழுந்து
வரும்;  செந்நெறிச்   செல்வரோடு   -   செம்மையான   நெறியில்
செல்பவராகிய  முனிவர்களுடன்;  அவ்வயின்  அன்று  உறைந்து -
அவ்விடத்தில்  அன்று தங்கியிருந்து; அலர்கதிர்ப் பரிதி மண்டிலம்-
விரிந்த   கதிர்களையுடைய  சூரியன்;  அகன்குன்றினின்று  இவர -
அகன்ற  மலையிலிருந்து  மேலே  ஏற;  ஓர்  சுடுசரம்  குறுகினார்-
(மூவரும்) ஒரு பாலைவனத்தை நெருங்கினர்.

செம்மை+நெறி:   செந்நெறி (நன்னெறியாளர் என்றுமாம்). அலர்கதிர்:
விரிகதிர்.  பரிதிமண்டலம்:  சூரியமண்டலம்  அகன்குன்று:   உதயகிரி.
இவர்தல்: ஏறுதல். குறுகி: சேர்ந்து.

இச்சோலை    யாதெனக் கேட்ட ராமனுக்கு. சிவபிரான் யோகுசெய்த
இடமென முனிவன் கூறி. அதன் தூய்மையைச்  சிறப்பித்துக்  கூற.  பின்
மூவரும்  தொடர்ந்து  சென்று  ஒரு  பாலையை   எய்தினர்   என்பது
பொருள்.                                                  4