தாடகை வதைப் படலம் - 342
அங்கநாட்டு வரலாறும் காமனாச்சிரம வரலாறும் (342-343)
342.
‘திங்கள் மேவும் சடைத்
தேவன்மேல். மாரவேள்.
இங்கு நின்று எய்யவும்.
எரிதரும் நுதல் விழிப்
பொங்கு கோபம் சுட. பூளை
வீ அன்ன தன்
அங்கம் வெந்து. அன்று தொட்டு
அனங்கனே ஆயினான்.
திங்கள் மேவும் சடைத் தேவன் மேல்-சந்திரனைத் தாங்கியுள்ள
சடைமுடியையுடைய தேவனாகிய சிவபிரான் மேல்; மார வேள் இங்கு
நின்று எய்யவும் - மன்மதன். மலரம்புகளை இங்கு இருந்து
எடுத்தெய்யவே; எரிதரு நுதல் விழி - நெருப்பைக் கக்கும் நெற்றிக்
கண்ணில்; பொங்கு கோபம்சுட - பொங்கி எழுந்த சீற்றம் சுடுதலால்;
பூளை வீ அன்ன தன் அங்கம்வெந்து - பூளைப் பூப்போன்ற தனது
உடல் முழுதும் எரிந்து போய். அன்று தொட்டு அனங்கனே
ஆயினான் - அந்த நாள் முதல் மன்மதன் அங்க மற்றவனே
ஆய்விட்டான்.
திங்கள்: சந்திரன். சடைத்தேவன்: சிவபிரான். மாரவேன்:
மன்மதன். ‘வேள்’ என்பதற்கு விரும்பத்தக்க அழகுடையவன் என்பது
பொருள். நுதல் விழி: ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்
தொக்கத் தொகை. விழி: முதல்
நிலைத் தொழிற் பெயர். வீ: நன்குமலர்ந்த மலர். அனங்கன்:
அங்கம் இல்லாதவன். பூளைவீ: பூளைப்பூ காற்றில் பறக்குமளவு
லேசானது. ‘மாருதமறைந்த பூளை’ என்பார் பின்னும்
சிவபிரானது நெற்றிக்கண் நெருப்பால் மன்மதன் எரிந்து
சாம்பலானான் என்பது கந்தபுராணத்துட் கூறப்படும் செய்தியாம். 1
