தாடகை வதைப் படலம் - 343

bookmark

343.

‘வாரணத்து உரிவையான் மதனனைச்
   சினவு நாள்.
ஈரம் அற்றும் அங்கம் இங்கு
   உகுதலால். இவண் எலாம்.
ஆரணத்து உறையுளாய்! அங்க
   நாடு; இதுவும். அக்
காரணக் குறியுடைக்
   காமன் ஆச்சிரமமே.
 
ஆரணத்து   உறை யுளாய்   -  வேதங்களை  வாழும் இடமாக
உடையவனே;  வாரணத்து   உரிவையான்  -  யானைத்  தோலைப்
போர்த்தவனாகிய  சிவபிரான்; மதனனைச் சினவு நான்- மன்மதனைக்
கோபித்த  நாளில்;  ஈரம்  அற்று  அங்கம்  இங்கு உகுதலால்  -
பசையற்றுப்    போய்    அவனது    சிதைந்த  உடல்  இங்குச் சிதறி
வீழ்ந்ததால்;  இவணெலாம்  அங்கநாடு - இந்த இடமெல்லாம் அங்க
நாடு  என  அழைக்கப்படும்  இடமாகும்; இதுவும்  அக் காரணக்குறி
உடைகாமன்  ஆச்சிரமமே - இந்த இடமும். அந்தக்காரணக் குறியை
உடைய காமன் ஆச்சிரமம் என்று சொல்லப்படுவதாகும்.

வாரணம்:  யானை.  உரிவை:  உரித்த  தோல்.  யானை   உரித்த
தோலைச்  சிவபிரான்  போர்வையாக  உடையவன் என்பது   புராணச்
செய்தி.   தனது   யாக   நிலையைக்    கெடுத்து. காம   இச்சையை
யுண்டாக்குவதற்கு  மலர்க்கணைகளை  எய்த  மன்மதனைக்  கோபித்து
எரித்த   செய்தி  புராணத்துட்  கூறப்பட்டதாகும்;  ஈரம்:   உடற்பசை
உகுதல்:   சிதறுதல்   ஆரணம்:   வேதம்.  ஆரண+துறை    எனவும்.
ஆரணத்து  -உறையுள்  எனவும்  இருவிதமாகவும் விரித்துப்  பொருள்
கூறலாம்.                                                2