தமிழ்நாட்டின் புரட்சிக் குழுக்கள்

bookmark

சிற்றூர்களில் வாழும் மக்கள் தங்களுக்குள் அரிகாரன் எனப்படும் ஒற்றர்கள் மூலம் செய்தி பரப்பினர். கூட்டங்கள் கூடி புரட்சி குறித்து முடிவெடுத்தனர். தமிழகத்தில் அமைதியின்மை உருவாகிவிட்டதை அறிந்த மைசூரின் திப்பு சுல்தானும் பிரான்சு நாட்டு நிர்வாகக் குழுவினரும் இரகசியமாகத் தூதர்களை அனுப்பி வைத்தனர். இதன் விளைவாக விருப்பாச்சி கோபால நாயக்கர் தலைமையில் பழனியிலும், மருதுபாண்டியர் தலைமையில் சிவகங்கையிலும். மயிலப்பன் தலைமையில் இராமநாதபுரத்திலும், சிவகிரியின் மாப்பிள்ளை வன்னியத் தேவர் மற்றும் பாஞ்சாலங்குறிச்சியின் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் தலைமையில் திருநெல்வேலியிலும் குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டன. இதே நேரம் தென்னிந்தியாவின் பிற பகுதிகளிலும் இத்தகைய புரட்சிக் குழுக்கள் தோன்றின. குறிப்பாக மலபாரில் கேரள வர்மா, கன்னட தேசத்தில் விட்டலஹெக்டே, அரிசிக்கரையில் கிருஷ்ணப்ப நாயக்கர், பெல்ஹாமில் தூந்தாஜி வாக் ஆகியோர் தலைமையில் குழுக்கள் உருவாயின.

இக்குழுக்கள் பெற்ற படை உதவிகள்:-

இப்புரட்சியாளர்கள் மைசூர் அரசு, நிசாம் அரசு, குவாலியர் அரசு, மொகலாயர், சீக்கியர் போன்ற வட இந்திய ஆட்சிக்குடியினர் ஆகியோரிடம் ஆதரவு தேடினர். இவர்களுள் மைசூரின் திப்புவும், குவாலியரின் சிந்தியாவும் புரட்சியாளர்களின் நடவடிக்கைக்குத் தமது ஆதரவைத் தெரிவித்தனர். 1799-ல் திப்புசுல்தான், உரிய வெகுமதிகளுடனும் கடிதங்களுடனும் தம்முடைய பிரதி நிதிகளைப் பழனிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் மார்ச் 5, 1799-ல் நடந்த ஆங்கிலேயர்களுக்கெதிரான போரில் திப்பு கொல்லப்பட்டார். வெற்றிக்குப் பின் மதராஸ் (இன்றைய சென்னை) ஆளுநர் எட்வர்டு கிளைவ் பாஞ்சாலங்குறிச்சியை வென்று அடிமைப்படுத்த தமது இராணுவத்தை அனுப்பினார். இப்படையினர் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றி கட்டபொம்மனைத் தேடிக் கண்டுபிடித்து தூக்கிலிட்டனர். கீழைப் பாளையக்க்காரர்களையும் ஒடுக்கினார்கள்.

இந்தியாவிற்கு வந்து திப்புவின் படைகளுடன் சேர்ந்து போரில் பங்கேற்கும் எண்ணத்தில் எகிப்து, சிரியா வரை படை நடத்தி வந்த நெப்போலியன் போனபார்ட் தமது கிழக்கிந்தியப் போர் நடவடிக்கையைக் கைவிட்டுப் பிரன்சுக்குத் திரும்பினார். எனவே, பிரெஞ்சு உதவியாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பொய்த்தது.

தூந்தாஜி வாக்கின் ஆதரவு நடவடிக்கைகள்:-

சூழ்நிலை பாதகமாக இருந்தாலும் திருநெல்வேலியிலும், மைசூரிலும் எஞ்சியிருந்த புரட்சியணியினர் சிவகங்கைக் காடுகளுக்கும் பழனிக்காடுகளுக்கும் வந்து சேர்ந்தனர். அடர்ந்த காடுகள் தந்த பாதுகாப்பின் காரணமாக புரட்சிக்கான சூழ்நிலை மீண்டும் உருவாகத் தொடங்கியது. விருப்பாச்சி கோபால நாயக்கர், மருது பாண்டியன் ஆகியோரின் ஊக்கத்தால் புரட்சியாளர்கள் விடுதலை பெறவேண்டுமென்ற தங்களது தீர்மானத்தினை செயல்படுத்துவதற்காக மீண்டும் இயக்கத்தினைக் கட்டமைத்தனர். கூட்டாளிகளின் ஆதரவின்றி இந்நோக்கம் எளிதில் நிறைவேற்ற இயலாது. எனவே தக்காணத்தில் தனக்கென ஒர் அரசை உருவாக்கிக் கொண்டு, இரு பேருலகுகளின் சக்கரவர்த்தி எனத் தம்மை அறிவித்துக் கொண்டு, பிரித்தானியர்களுடன் தொடர்ந்து போரிட்டு வந்த மராட்டியத் தலைவர் தூந்தாஜி வாக்கின் ஆதரவைப் பெற புரட்சியாளர்கள் முயன்றனர். ஈரோடு சின்னணகவுண்டர், வெங்கடரமணய்யா, பரமத்தி அப்பாஜிக்கவுண்டர் ஆகியோர் தலைமையில் இரகசியமாக மூன்று தூதுக் குழுக்களைத் தனித்தனியாக அனுப்பினர். இவர்கள் காட்டு வழிகளில் பயணம் செய்து தூந்தாஜி வாக்கின் முகாமை அடைந்தனர். தமிழர்கள் புரட்சிக்கு ஆயத்தமாக உள்ளனர் எனப் பல விதங்களிலும் வலியுறுத்திக் கூறிய பின்னரே தூந்தாஜி வாக்கின் ஆதரவு குறித்த உறுதிமொழியைத் தூதுக்குழுவினரால் பெற முடிந்தது. அதன் பின்னர் தூந்தாஜி வாக், பெருந்துறை, கரூர், அரவக்குறிச்சி, காங்கேயம், மதுரை முதலிய பல ஊர்களின் மணியக்காரர்களுக்கு (நாட்டாண்மை) ஏராளமான கடிதங்களை எழுதி தூதுவர்களிடம் கொடுத்தார். புரட்சி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தனது பிரதிநிதியாக தும்பிச்சி முதலி என்பவரை நிர்ணயித்தார். நிஜாம் பகுதியைச் சேர்ந்த சர்தார்கள், விஜயநகர வம்சத்தவரான ஆனகுந்தி அரசர், ஷோலாப்பூர், ராயதுர்க்கம் ஆகியவற்றின் ஆட்சியாளர்கள் ஆகியோர் புரட்சியாளர்களுக்கு ஆதரவு அளித்தனர்.

ஆங்கிலேயர்களை எதிர்த்த புரட்சியாளர்களின் கூட்டணி:-

1800 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிவகங்கை மருது பாண்டியர்கள் , மராட்டியப் புரட்சியாளர்களுடன் உறுதியான பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு விட்டார் எனவும், தூந்தாஜி வாக் படையில் ஆயுதம் தரித்த ஆடவர் குழுக்கள் அணியணியாகச் சென்று சேர்வதாகவும் பிரித்தானிய நிர்வாகத்தினருக்கு அரிக்காரர்கள் மூலம் தகவல் கிடைத்தது. ஆங்கிலேய எதிர்ப்புக் குழுக்கள் ஒன்றுடனொன்று கூட்டணியமைத்து திட்டமிட்ட ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டதன் விளைவாக கிளர்ச்சியின் தாக்கம் திருநெல்வேலியிலிருந்து மலபாருக்கும், மலபாரிலிருந்து குவாலியருக்கும் விரவிப் பரவியது.

பழனிச் சதித்திட்டம்:-

1800-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் நாள் எதிர்ப்புப் படையினர் தமது செயல் திட்டத்தை வகுப்பதற்காகக் கூடினர். பழனி சதித்திட்டம் எனப்படும் இக்கூட்டத்தில் புரட்சியணியின் தலைவர்களும் அவர்களது உதவியாளர்களும் கலந்து கொண்டனர். இக்கால கட்டத்தைச் சேர்ந்த ஆங்கிலேயரின் குறிப்பேடுகளின், மராட்டியப் புரட்சியாளர்களின் பிரதிநிதிகள் ஏப்ரல் 28 - ஆம் நாளன்று விருப்பாச்சியை அடைந்தனரென்றும், பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்டு 30 ஆம் தேதியன்று திரும்பினர் என்றும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு கோபால நாயக்கர் தலைமை வகித்தார். 1800 ஜூன் 3 ஆம் நாள் கோயமுத்த்தூர் கோட்டையைத் தாக்குவதென்றும் பிரித்தானிய குதிரைப்படையின் ஐந்தாவது படை வகுப்பினை முற்றிலும் அழிப்பதென்றும் நாடுமுழுவதும் பிரித்தானியருக்கு எதிரான கிளர்ச்சியை வெடிக்கச் செய்வதற்கு இதுவே குறியீடாக இருக்கும் என்றும் இக்கூட்டம் முடிவு செய்தது.

கோயமுத்தூர் கோட்டை:-

புரட்சிப்பேரணியின் இரு பிரிவுகளான தென்னக மற்றும் வட இந்திய அணிகளுக்கிடையே கோயமுத்தூர் ஒரு பாலமாக விளங்கியதால், கோயமுத்தூர் கோட்டையைத் தேர்ந்தெடுத்தனர். 1800- ஜூன் 3 ஆம் நாளைத் தேர்ந்தெடுக்கக் காரணம் அந்நாள் முகர்ரம் விழாவின் இறுதிநாள் ஆகும். கோயமுத்தூர் கோட்டையைக் காக்கும் பொறுப்பு பெரும்பாலும் முகமதிய சிப்பாய்களையே கொண்டிருந்த ஐந்தாவது படை வகுப்பிடம் இருந்தது. எனவே முகமதிய வீரர்கள் பல இரவுகளாகத் தொடர்ந்து கண்விழித்து முகர்ரம் விழாவினைக் கொண்டாடி களைத்து ஓய்ந்திருப்பர் என புரட்சியாளர்கள் எதிர்பார்த்தனர்.

போராளிகள் ஷேக் ஹுசைன் தலைமையில் அருகிலிருந்த மலைகளில் ஒளிந்து கொண்டு காத்திருக்கவும், திண்டுக்கல்லைச் சேர்ந்த புரட்சியாளர்கள் ஷேக் ஹுசைனுக்கு ஆதரவாக உரிய வேளையில் வந்து சேர்ந்து கொள்ளவும் தீர்மானித்தனர். தூந்தாஜி வாக் தமது குதிரைப் படையை கோயமுத்தூருக்கு அனுப்புவதென்றும் அக்குதிரைப்படைத் தொகுதி வந்து சேர்ந்ததும் மருது பாண்டியனும் அவருடைய கூட்டாளிகளும் ஒரே நேரத்தில் கலகத்தில் இறங்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இக்கலகத்தில் சிற்றூர்களும் கலந்துகொண்டன. அவர்கள் படை உதவிக்கு விரைந்து வந்து சேர கிள்ளு என்ற அடையாள முறை பின்பற்றப்பட்டது. எதிரியின் ஆயுதப்படை பற்றி அறிந்திருந்ததால் கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றுவதென தேசபக்தர்கள் முடிவு செய்தனர்.

மருதுபாண்டியனின் நடவடிக்கைகள்

புரட்சி குறித்த கைப்பிரதிகள், குறிப்பாக திருச்சி மலைக்கோட்டையின் நுழைவாயிலிலும், திருவரங்கம் கோயில் கோபுரத்திலும் மருதுபாண்டியனின் பிரகடனங்கள் ஒட்டப்பட்டன. அவை பிரித்தானியரின் நம்பிக்கைத் துரோகத்தினையும், மக்களின் நிலை மற்றும் ஒற்றுமையின்மையையும், புரட்சியின் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் வரையறுத்துக் கூறின. எதிரியுடன் நாம் நேருக்கு நேர் மொதுதலை விட கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றலாம் என திட்டம் தீட்டப்பட்டது. காட்டுச்சூழலைத் துணைகொண்டு எதிரியை அலைக்கழிக்க வேண்டுமென்பதில் மருதுபாண்டியன், செவத்தையா ஆகியோர் உறுதியுடன் இருந்ததனர்.

கோயமுத்தூர்க் கோட்டை மோதல்:-

1800-ஆம் ஆண்டு மே மாதம் புரட்சியணி ஐந்து பகுதிகளாகப் பிரிந்து பழனி-திண்டுக்கல் பகுதிக் காடுகளிலிருந்து தாராபுரம் நோக்கி முன்னேறியது. இப்படை ஈட்டிகளையும் நெருப்புப்பற்றவைத்துச் சுடும் துப்பாக்கிகளையும் ஏந்தியிருந்தன. சின்னண கவுண்டர் இவ்வைந்து பிரிவுகளுக்கும் தலைமை வகித்தார். ஜூன் 3 ஆம் நாள் 600 பேர் கொண்ட புரட்சியாளர் படை கோயம்புத்தூர்க் கோட்டை கண்ணுக்குத் தென்படும் ஓர் இடத்தை அடைந்து முகமது ஹாஷமின் படைத் தொகுதியும் தூந்தாஜி வாக்கின் குதிரைப்படையும் வந்து சேரும் வரை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் காத்திருந்தது.

கம்பெனியார் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக வடக்கிலிருந்து வந்து சேரவேண்டிய படைகள் வந்து சேரவில்லை. மேலும் புரட்சியாளர்கள் பற்றி கோயமுத்தூர் வட்டாட்சியரின் மூலமாக செய்தி அறிந்த ஆங்கிலேயர்கள், கோட்டையில் ஐரோப்பிய மற்றும் இராஜபுத்திர வீரர்களைக் காவலுக்கு நிறுத்தினர். இஸ்லாமிய வீரர்களை வெளியே அனுப்பிப் போரிடவும் ஒளிந்து கொண்டிருக்கும் பிற புரட்சியாளர்களை வேட்டையாடவும் பணித்தனர். தலைமலையில் ஏற்பட்ட பின்னடைவால் புரட்சியாளர்கள் பலர் சிறைசெய்யப்பட்டனர். புரட்சியணித் தலைவர்களின் கடிதங்களை வைத்திருந்த முகமது ஹாஷம் சிறைபிடிக்கப்பட்டார். ஆனால் கடிதங்களை அழித்துவிட்ட ஹாஷம் 1800 ஜூன் 8-ஆம் நாள் தன் குரல் வளையை தாமே அறுத்துக்கொண்ட்டு தற்கொலை செய்துகொண்டு புரட்சியணியின் முதல் தியாகியானார்.

அப்பாஜிக்கவுண்டர் மற்றும் 42 புரட்சியாளர்களுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்கப்பட்டது. கலகம் நிகழ்ந்த இடங்களான கோயம்புத்தூர், தாராபுரம், சத்தியமங்கலம் முதலிய இடங்களில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. மக்கள் முன் அச்ச உணர்வைப் பரப்புவதற்காக அரங்கேறிய இக்காட்டுமிராண்டித்தனம் நேர்மாறான விளைவை ஏற்படுத்தியது. இக்கொடுமையறிந்த பிற பகுதிகளிலிருந்த புரட்சியாளர்களும் உடனடியாக போரிலிறங்கக் களம் புகுந்தனர்.

கிளர்ச்சி பரவுதல்

புரட்சியாளர்கள் ஒன்றுபட்டு தக்காணத்தில் குந்தா, கன்னடப்பகுதி, பெல்காம், மைசூர் இராச்சியத்தின் மேற்குப் பகுதி ஆகியவற்றைக் கைப்பற்றினர். ஜமலாபாத், வனவாசி, கோண்டா ஆகிய ஊர்களில் இருந்த பிரித்தானிய இராணுவ நிலைகளைத் தாக்கி, அவற்றையும் கைக்கொண்டனர். மலபாரின் கேரள வர்மாவும், பழனியின் கோபால நாயக்கரும் மலைக்கோட்டைகளிலிருந்த பிரித்தானிய சிப்பாய்களை விரட்டி விட்டு இராணுவப் பண்டக சாலைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

மருது பாண்டியன் பாளையங்கோட்டையில் இருந்த புரட்சியாளர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கினார். 1799-ல் கட்டபொம்மன் உள்ளிட்ட பாளையக்காரரை அடக்கிய பின் பிரித்தானியர் அவரது தம்பிகளான செவத்தையா, ஊமைத்துரை உட்பட 17 புரட்சித் தலைவர்களை பாளையங்கோட்டையில் சிறை வைத்திருந்ததனர். 1801- ஆம் ஜனவரி மாதம் 200 புரட்சியாளர்கள், திருச்செந்தூருக்குத் திருத்தலப் பயணம் மேற்கொள்ளும் பரதேசிகள் போல வேடமிட்டு கோட்டைக்குள் நுழைந்து கைதிகளை விடுவித்துக் கொண்டு தப்பினர். துணிச்சலான இந்தச் செயல் தென்கோடிவரை புரட்சி பரவியதற்கு அடையாளமாக விளங்கியது.

கைப்பற்றிய பகுதிகள் :-

பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தூத்துக்குடி கடற்கரைப் பகுதி வரை புரட்சியாளர்கள் கைப்பற்றினர். 1801-ஆம் ஆண்டு மே மாதத்தில் கலகக்காரர்கள் இராமநாதபுரத்தையும் தஞ்சையின் சில பகுதிகளிலும் ஊடுருவினர். இதனிடையில் திண்டுக்கல்லிலும் பழனியிலும் புரட்சியணியின் அதிகாரத்தைக் கோபால நாயக்கர் நிலைநாட்டினார். மதுரை இராச்சியத்தின் மேற்குப் பகுதியைக் கள்ளர் குலத்தவர் கைப்பற்றினர். கடற்கரைப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் கொணர்ந்த தேசப்பற்றாளர்கள் பெரிய தோணிகள் மூலமாகப் பண்டங்களையும் மளிகைப் பொருட்களையும் போர்த்தளவாடங்களையும் கொண்டுவந்து சேர்த்தனர்.

புரட்சியரசு ஆட்சி முறை :-

ஆங்கிலேயரிமிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களை நல்ல முறையில் நிர்வகிக்கவும், அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படாமலிருக்க, விழிப்புடன் கண்காணிக்கவும் புரட்சியணித் தலைவர்கள் முயன்றனர். நிலவருவாய் நிர்ணயம் செய்து, வரிவசூல் செய்வதற்கு அமுல்தார்கள் எனப்படும் அதிகாரிகளை நியமித்தனர். தாணியமோ, விறகோ, வைக்கோலாகவோ புரட்சி நடவடிக்கையை ஊக்குவிக்க தம்மால் முடிந்தட ஏதாவது ஒரு பொருளை கொடுத்தால் போதும் என்பது மட்டும் குடிமக்களிடம் எதிர்பார்க்கப்பட்டது. புரட்சியரசிடம் பணிபுரியும் பொதுத்துறை ஊழியர்கள், மக்களுக்கு எதிராக முறையற்ற செயலில் ஈடுபட்டால் அதுபற்றியோ, ஐயத்துக்கிடமான நபர்களின் தவறான நடவடிக்கை பற்றியோ புரட்சியரசுக்குத் தெரிவிக்க அரிக்காரர்கள் நியமிக்கப்பட்டனர். புரட்சியின் அவசியத்தை அனைவரும் உணரவும், புரட்சியின் குறிக்கோள்கள் ஈடேறச்செய்யவும் அரசாங்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். கிராம சமுதாயம் மீண்டும் தனது பணியினைத் தொடங்கிச் செயல்பட உதவிக்கரம் நீட்டப்பட்டது. அதே வேளையில் படைக்கலன்கள் உருவாக்குவதற்கும் அவற்றை மாற்றார்க்குக் கிட்டாத இடங்களில் சேகரித்து வைப்பதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

கொரில்லாப்போர் முறை:-

புரட்சி அதி வேகத்தில் பரவியதும், அதனால் விளைந்த நன்மைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சியும் ஆங்கிலேயரை வியக்க வைத்தன. தமது பொது எதிரியான ஆங்கிலேயரை எதிர்க்க அனைத்துப் புரட்சியாளர்களும் ஒன்றுபட்டனர். எனவே எதிர்ப்பும் உறுதியாக இருந்தது. தாம் தாக்கப்படும் போது தகவல் தொடர்புகளைத் துண்டித்தும், எதிரி எதிர்பாராத வகையில், தங்களுடைய நிலைகளைத் தாங்களே தீயிட்டு அழித்து விட்டு அடர்ந்த காடுகளில் ஓடி ஒளிந்து கொண்டும் கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றி பிரித்தானியப் படையினரை அலைகழித்துச் சோர்வுறச் செய்தனர். இந்த கொரில்லாப் போர் முறையை வேலு நாச்சியார் பெண்கள் படைப்பிரிவில் இருந்த குயிலி என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயப் பெண் பின்பற்றி உயிர் துறந்தது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியருக்கு சாதகமான சூழல்கள்:-

புரட்சியாளர்களுடைய போர் நடவடிக்கைகளால் எளிதில் இராணுவத்தின் கைகளில் பிடிபடாமல் தப்பினர். எனினும், பிரித்தானியருக்கு பல விதங்களில் நிலைமை சாதகமானதாக இருந்தது.

பிரித்தானியர் தம்முடைய அனுபவமிக்க படைத் தளபதிகள் மற்றும் தேர்ந்த பயிற்சியும் போர்க்கருவிகளும் உபகரணங்களும் பெற்றிருந்த படைகளைக் கொண்டு ஆங்கிலேயர் மைசூர், மராட்டியப் படைகளின் புரட்சிப் படையை முறியடித்தனர்.

கடற்படை வல்லமையால், புரட்சியணியினர்க்குரிய கடல்வழித் தகவல் தொடர்புகளைத் துண்டித்து விடவும், வங்காளம், மலேசியா, இலங்கை முதலிய இடங்களிலிருந்து படைகளைக் கொண்டுவந்து குவிக்கவும் இயன்றது.

இந்தியாவில் உள்ள அரசுகளான கர்நாடக அரசு, மைசூர் அரசு, தஞ்சாவூர் அரசு, திருவிதாங்கூர் அரசு, புனே அரசு, ஹைதராபாத் நிசாம் அரசுகள் ஆங்கிலேயருக்கு ஆதரவாக படைகளை அனுப்பியும், மளிகைச் சரக்குகள் முதலிய பண்டங்களை அனுப்பியும், உளவு செய்திகள் சொல்லியும் உதவின.

ஆங்கிலேயர் இராணுவத் தளங்களைத் தமது கட்டுப்பாட்டில் உறுதியாக வைத்துக் காத்துவந்தனர்.

புரட்சியாளர்கள் வசதி குறைந்த கிராமப்புறப் பகுதிகளை மட்டுமே ஆங்கிலேய அதிகாரத்திலிருந்து மீட்டனர். அங்கிருந்து எதிர்த்தாக்குதல் தொடுப்பதற்கு மட்டுமே அவர்களால் இயன்றது.

புரட்சியாளர்களின் தோல்விகள்:-

தமிழகப் புரட்சியாளர்களை அவர்களது வட இந்தியக் கூட்டாளிகளிடமிருந்து பிரித்துத் தனிமைப்படுத்தும் முயற்சியில் ஆங்கிலேயர் ஈடுபட்டனர். தொடக்கத்தில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்த பிரித்தானியர் பேஷ்வா, நிசாம் முதலிய அச்சு அரசுகளின் உதவி கொண்டு மராட்டிய கர்நாடக, மலபார்ப் பகுதிகளைச் சேர்ந்த கலகக் காரர்களை ஒடுக்கினார்கள் . கர்னல் வெல்லெஸ்லி படை நடவடிக்கைக்குத் தலைமையேற்றார். தூந்தாஜி வாக் அவர்கள் ராணாபெத்னூர், சாவனூர் ஆகிய இடங்களில் தோல்விகளைச் சந்தித்தார். எனவே புரட்சிப்படை ராய்ச்சூருக்குப் பின்வாங்கியது. இச்சண்டையில் 1800, செப்டம்பர் 10 ஆம் நாள் தூந்தாஜி வாக் கொல்லப்பட்டார். மலபாரில் செயல் திறம் மிக்க கேரள வர்மாவுக்குத் துணை நின்ற ஏமன் நாயர் தமது அணியின் இரகசியங்களை ஆங்கிலேயரிடம் தெரிவித்ததார், எனினும் தமது தொண்டர் படையின் நீண்ட நாட்கள் போராடிய கேரள வர்மா 1805, நவம்பர் 30 ஆம் நாள் கம்பெனியாரின் துருப்புப் பிரிவு ஒன்றினால் கொல்லப்பட்டார்.

தமிழகத்தில் அடக்கு முறைப்போர் :-

தமிழகப் புரட்சியாளர்களுக்கு எதிராக புனித ஜார்ஜ் கோட்டை, புனித தாமஸ் மலை (பரங்கிமலை), ஆற்காடு, மலபார் ஆகிய இடங்களில் இருந்து துருப்புகள் கொணர்ந்து இறக்கப்பட்டது. அக்னியூ என்பவரின் தலைமையில் புறப்பட்ட இப்படை 1801, மே 24 ஆம் நாள் பாஞ்சாலங் குறிச்சியைத் தாக்கி 1050 பேரைக் கொன்றது. செவத்தையா, ஊமைத்துரை உட்பட உயிர் பிழைத்தவர்கள் மருது சகோதரர்களின் உதவியை நாடினர். பிரித்தானியப் படை மானாமதுரை, பார்த்திபனூர் வழியாகப் பரமக்குடியைக் கைப்பற்றி மதுரையையும் புரட்சியாளர்கள் பிடியிலிருந்து விடுவித்தது. தொண்டி துறைமுகத்தை அடைந்த ஆங்கிலேயப் போர்க்கப்பல் ஒன்று புரட்சியாளர்களுக்கு சரக்குகள் இறக்குமதி செய்வதற்காக வந்த பெரிய தோணிகளைத் தாக்கி அழித்தது.

தமிழகப் புரட்சியாளர்களின் இறுதித் தோல்வி :-

1801, செப்டம்பரில் மருது பாண்டியர்களின் வலிமையான தளமாக விளங்கிய காளையார் கோவில் நடையை ஆங்கிலேயப் படையின் மூன்று பிரிவுகள் ஒரே நேரத்தில் அதிரடியாகத் தாக்கிக் கைப்பற்றினர். ஆயினும் மருது சகோதரர்கள் தப்பித்து சிங்கம்புணரிக் காடுகளுக்குள் புகுந்து கொண்டனர். தப்பியோடிய பிற புரட்சியாளர்கள் ஊமைத்துரையின் தலைமையில் கோபால நாயக்கரின் அணியினருக்குப் பக்க பலமாகச் சென்று சேர்ந்தனர். 4000 பேருடன் பழனிமலைத் தொடரைப் பிடித்து கொண்ட ஊமைத்துரை எதிரி முன்னேறி வருவதைத் தடுக்க தடுப்புச் சுவர் எழுப்பினர். இருப்பினும் இன்னஸ் தலைமையில் வந்த படைகள் அதனைக் கைப்பற்றி, பிரித்தானியரின் அதிகாரத்தை நிலைநாட்டி புரட்சியாளர்களை விரட்டிச் சென்றது. திண்டுக்கல்லில் இருந்து வெற்றிலைக் குண்டு (வத்தலகுண்டு) வரை 51 மைல் தொலைவுக்கு மூன்று நாட்கள் உணவோ தண்ணீரோ இன்றிப் புரட்சியாளர்கள் போரிட்டுக் கொண்டே பின் வாங்கினர். தம் சக்தியை இழந்து சோர்ந்து போன புரட்சியாளர்கள் இறுதியில் முறியடிக்கப்பட்டனர்.