தமிழர் வானியல் ஒரு ஆய்வு

bookmark


பல ஆயிரம் ஆண்டுகளாகத் தனித்துவமான பண்பாட்டைக் கொண்டவர்களாக ஓரேயிடத்தில் வாழ்ந்து வருகின்ற தமிழருக்கு வானியல் துறையில் இருந்த அறிவையும், அது பற்றி அவர்கள் கொண்டிருந்த விளக்கங்களையும், அந்த அறிவை அவர்கள் பயன்படுத்திய முறைகளையும் தமிழர் வானியல் என்னும் தலைப்பில் இக் கட்டுரை விளக்க முயல்கிறது.

அறிமுகம்:-

பண்டைக்காலத்தில், வானவியலுக்கு என்று தனியான நூல்கள் எதுவும் தமிழில் இருந்ததாகத் தெரியவில்லை. தமிழ் மக்கள் வாழ்க்கை முறைகள் நம்பிக்கைகள் மற்றும் பிற அம்சங்கள் பற்றி அறிந்து கொள்ள உதவும் மிகப் பழைய எழுத்து மூல ஆவணங்கள் சங்க நூல்களே ஆகும். சங்கப் பாடல்களை எழுதியவர்கள் பெரும்பாலும் சாதாரண புலவர்களே அவர்களிடம் வானியல் போன்ற துறைகளின் நுட்ப அம்சங்கள் தொடர்பான தகவல்களை எதிர்பார்க்க முடியாது. எனினும் சங்க இலக்கியங்களில் வானியலோடு தொடர்புடைய, மக்கள் மட்டத்தில் புழங்கிய பல்வேறு விஷயங்கள் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும்.

விண்பொருட்கள்:-

வானிலே உலாவருகின்ற பலவகையான பொருட்கள் பற்றி முற்காலத்தில் தமிழ் மக்களுக்கு இருந்த அறிவு பற்றிய குறிப்புக்கள் சங்க காலம் மற்றும் சங்கம் மருவியகால நூல்களிலே கிடைக்கின்றன. சூரியன், சந்திரன் ஆகியவை வானில் மிகத் துலக்கமாகத் தெரிபவை. இயற்கையின் இயக்கத்தில் மிகத் தெளிவான பங்கு வகிப்பவை. இதனால் இவற்றின் இருப்புப் பற்றிய அறிவும், அவற்றின் குணநலன்கள் பற்றிய அறிவும் நீண்ட காலமாகவே தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வந்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இருக்க முடியாது. மிகமுந்திய தமிழ் இலக்கியங்களிலே இவை பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுடன் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி போன்ற கோள்களைப் பற்றிய தகவல்களும் இப்பாடல்களிலே காணப்படுகின்றன.

மேலும் அவற்றுள் செந்நிறமாய் இருந்த கோளை செவ்வாய் என்றனர். மேலும் இக்கோளினை செம்மீன், அழல் எனப் புறநானூறும், பதிற்றுப்பத்தும் குறிப்பிடுகின்றன. பரிபாடல் இதனைப் படிமகன் என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளது. புதிதாக கண்டறிந்த  கோள் புதன் என அழைக்கப்பட்டது. இதே பரிபாடல் புதன் கோளைப் புந்தி என்ற பெயரிட்டு அழைக்கிறது. புதன் கோளுக்கு அறிவன் என்ற பெயரும் உண்டு. "வியா" என்றால் பெரிய என்று பொருள். தேவர்களுக்குக் குரு என்று கருதப்பட்ட வியாழனைத் தமிழ்ப் பாடல்கள் அந்தணன் என்கின்றன. சூரிய, சந்திரர்களுக்கு அடுத்தபடியாக வானிலே துல்லியமாகத் தெரியும் வெள்ளி, பெரும்பாலும் வெள்ளியென்றே அழைக்கப்பட்டு வந்ததாயினும் வெண்மீன், வைகுறுமீன், வெள்ளிமீன் போன்ற பெயர்களிலும் இது குறிப்பிடப்படுவதைக் காணலாம். இது வெண்மை நிறமுடையதால் வெள்ளி எனப்பட்டது. சனிக்கோள் கருநிறம் பொருந்தியதாகக் கருதப்பட்டதனால் இது காரிக்கோள் எனவும் மைம்மீன் எனவும் வழங்கப்பட்டது. இப்பெயர் புறநானூற்றுப் பாடலொன்றில் இடம் பெற்றுள்ளது.

கோள்கள் என அழைக்கப்பட்ட மேற்காட்டியவற்றைவிட பல்வேறு நட்சத்திரங்கள் பற்றியும், நட்சத்திரக் கூட்டங்கள் பற்றியும் அக்காலத் தமிழர்கள் அறிந்திருந்தார்கள். தானே ஒளி தருபவை "நாள்மீன்" என்றும் சூரியனிடம் இருந்து ஒளியை பெறுபவை கோள்மீன் என்றும் அழைக்கப்பட்டன.

"நாள்மீன்" போன்ற பெயர்களில் அழைக்கப்பட்ட அவை பற்றிய குறிப்புக்களும் பழந்தமிழ்ப் பாடல்களிலே உள்ளன. உரோகிணி, அருந்ததி, ஓணம் (திருவோணம்), ஆதிரை (திருவாதிரை), கார்த்திகை, சப்தரிசி மண்டலம் என்பன பற்றியும் இவை தகவல் தருகின்றன. இவற்றுள் கார்த்திகை அறுமீன் எனவும், சப்தரிசி மண்டலம், எழுமீன் எனவும், அருந்ததி, வடமீன் எனவும் தமிழில் அழைக்கப்பட்டன. இவற்றோடு, மகவெண் மீன் என மகமும், வேழம் எனப் பரணியும், முடப்பனையத்து நாள் என அவிட்டமும் பாடல்களிலே இடம் பெறுகின்றன. அகத்தியன் என்று பெயரிடப்பட்டுள்ள மீனைப் பரிபாடல் 'பொதியில் முனிவன்' எனக் குறிப்பிடுகிறது.

வானியல் நிகழ்வுகளும் விளக்கங்களும் :-

சூரியன், சந்திரன், கோள்கள் போன்ற விண்பொருட்களின் இயக்கங்கள் தொடர்பான அறிவு சங்ககாலத்தில் தமிழ் மக்களுக்கு இருந்தது. கவனிப்புகள் மூலம் பெற்றுக்கொண்ட தரவுகளை வைத்தே இவ்வியக்கங்கள் தொடர்பான புரிந்துணர்வுகளை அவர்கள் வளர்த்துக் கொண்டனர். புலன்களால் உணர்ந்து கொள்ளக்கூடியவற்றுக்கு அப்பால், நிகழ்வுகளுக்கு ஊகங்கள் மூலம் விளக்கங்களும் கொடுக்கப்பட்டன.

கி.மு. 1500 க்கு முற்பட்ட சிந்துவெளி எழுத்துக்கள் சிலவற்றுக்கு அஸ்கோ பர்போலா கொடுத்துள்ள ஊகத்தின் அடிப்படையிலான விளக்கங்கள்.

சங்க கால வானியல்:-

சங்க கால தமிழர்கள் வானத்தையே தன் வீட்டின் மேற் கூரையாகக் கொண்டவர்கள். வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல் நிகழ்வுகளையும், மாற்றங்களையும் கூர்ந்து கவனித்து வானியல் தொடர்பான சிந்தனைகளை இவ்வுலகுக்கு எடுத்தியம்பியவர்கள். தமிழகத்தில் வானியல் துறையில் சிறந்து விளங்கிய பலர் வாழ்ந்தனர் என்பதை கணியன் பூங்குன்றனார், கனிமேதாவியார், பக்குடுக்கை நன்கணியார் முதலிய பெயர்கள் சான்று பகர்கின்றன. சிலேட்டர் என்னும் வானியல் அறிஞர் தமிழருடைய வானநூற்கணித முறையே வழக்கிலுள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது என்னும் கருத்தைப் பகிர்கின்றார்.

சங்கத் தமிழர் ஐம்பெரும் பூதங்களின் தோற்றங்களை வெளிப்படுத்தும் போது பரந்து விரிந்த வானத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றியுள்ள அறிவியல் உண்மையை இவ்வுலகுக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேற்கோள்:-

1. மைம் மீன் புகையினும், தூமம் தோன்றினும்,

தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்,

வயல்அகம் நிறையப், புதற்பூ மலர,

மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்

ஆமா நெடு நிறை நன்புல் ஆரக்,

கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப்,

பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே;-புறநானூறு-117

பொருள் : இன்று வானியலாலர்களால் கருதப்படும் துர்தேவதை என்னும் சூரியனின் துணை விண்மீனை சங்க கால தமிழர் மைம்மீன் என்றும் தூமம் என்றும் கண்டனர்.

2.    விசும்பில் ஊழூழ் செல்லக்

கருவளர் வானத்திசையில் தோன்றி

உருவறி வாரா ஒன்றன் ஊழியும்

செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு

தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்

நுண்முறை வெள்ள மூழ்கி ஆர்தருபு - பரிபாடல்-2

பொருள் : பரிபாடல் பாடலடிகள் முறையாகத் தோன்றும் ஊழிக் காலங்களை வெளிப்படுத்துகிறது. முறையே வானம் முதல் ஊழிக் காலத்திலும், காற்று இரண்டாம் ஊழியிலும், தீ மூன்றாம் ஊழியிலும், நீர் நான்காம் ஊழியிலும், நிலம் ஐந்தாம் ஊழியிலும் தோன்றிய நிகழ்வு இன்றைய அறிவியலாரும் உடன்படு கருத்தாகும்.

3.    உலக முவப்பு வலனேர்பு திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு

ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி - திருமுருகாற்றுப்படை:1-3

பொருள் : தமிழர் இவ்வுலகிலுள்ள உயிர்கள் நிலைத்து வாழ ஞாயிறே முதன்மைக் காரணம் என்பதை உணர்ந்திருந்தனர். தமிழரின் பொங்கல் திருநாள் ஞாயிறை முதன்மைப்படுத்துவது ஈண்டு நோக்கத்தக்கது. திருமுருகாற்றுப்படையின் தொடக்க வரிகள், உயிர்கள் மகிழ ஞாயிறு எழுவதாக நக்கீரர் பதிவு செய்கிறார்.

4. வானம் மூழ்கிய வயங்கொளி நெடுஞ்சுடர்க்

கதிர்காய்ந்து எழுந்தகங் கனலி ஞாயிறு - நற்றிணை:163

பொருள் : நற்றிணையில், உலக உயிர்கள் ஞாயிறின் கதிர்களால் உயிர் வாழ்கின்றன. இல்லையேல் இவ்வுலகம் பனிமண்டி உலக அழிவு ஏற்படும் என்ற உண்மை புலப்பட்டு நிற்கிறது. மேலும், நற்றிணை பாடலொன்று, ஞாயிறு இருளைப் போக்க அதன் உட்பகுதி நெருப்பினால் எரிந்து கொண்டிருக்கிறது என்றும் அதைச் சுற்றிலும் ஒளிப்படலம் உள்ளது என்றும் கூறுகிறது.

5.வாணிற விசும்பின் கோண்மீன் சூழ்ந்த

விளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோற்றத்து - சிறுபாணாற்றுப்படை: 242-43

பொருள் : சிறுபாணாற்றுப்படை மூலம், சங்கத்தமிழர் ஞாயிறை நெருப்புக் கோளம் என்கின்றனர். இன்றைய அறிவியல் அறிஞர்களும் ஞாயிறு வடிவமற்று எரிந்து கொண்டிருக்கின்ற நெருப்புக் கோளம் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். இன்றைய வானியலறிஞர்கள் ஞாயிறை ஒன்பது கோள்கள் சுற்றுவதாகக் கண்டறிந்துள்ளனர். இந்நிகழ்வின் எச்சத்தை சிறுபாணாற்றுப்படையில் காணமுடிகிறது.

6. குடதிசை மாய்ந்து குணமுதல் தோன்றிப்

பாயிருள் அகற்றும் பயங்கெழு பண்பின் - பதிற்றுப்பத்து: 22:33-34

பொருள் : பதிற்றுப்பத்தின் வரிகள், ஞாயிறைச் சுற்றிலும் கோள்கள் சூழ்ந்துள்ள உண்மைப் பதிவைப் புலப்படுத்துகின்றன. இதன் மூலம் பல கோள்கள் ஞாயிறைச் சுற்றி வந்தன என்று தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், பூமியை ஞாயிறின் கோளாக இவர்கள் கண்டறியவில்லை. மாறாக காட்சிப் பார்வையின் அடிப்படையில் பூமியை ஞாயிறும் சந்திரனும் சுற்றுவதாக நம்பினர். இதை,  இங்கு, ஞாயிறு கிழக்கில் தோன்றி, மேற்கில் மறைவதையும், பூமி நிலையாக ஓரிடத்திலேயே இருப்பதாகவும் காட்சிப் பார்வையின் அடிப்படையில் அறிவியல் உண்மையை அறியாது இருந்த செய்தியும் வெளிப்பட்டு நிற்கிறது.

மற்ற பாடல்கள்

மேலும், திருப்பாவை 13, புறம்:25:1-3, 26:1-2; பதிற்றுப்பத்து 13:25-26 ஆகிய பாடல்கள் மூலமும் அறிய முடிகிறது. சங்க காலத் தமிழரின் வானியல் அறிவு இன்றைய அறிவுசார் உலகுக்கு ஒரு முன்னோடி என்பதில் ஐயமில்லை.

இதே போல இரவில் மணி அறிதல்:

27 நட்சத்திரங்களைக் கொண்டு இரவில் மணி அறிவதற்கு தமிழ் மரபில் ஒர் ஒற்றைப்பாடல் உண்டு. இதற்கு ஏடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அப் பாடல் கீழே கொடுக்கப்படுகிறது.

தமிழில் ஒற்றைப்பாடல்:-

சித்திரைக்குப்பூசமுதல் சீராவணிக்கனுஷமாம்

அத்தனுசுக்குத்திரட்டாதியாம்; நித்த நித்தம்

ஏதுச்சமானாலும் இரண்டேகாலிற் பெருக்கி

மாதமைந்து தள்ளி மதி.

பயனும் பொருளும்

இப்பாடலைக்கொண்டு ஒரு தோராயமான முறையில், இரவில் நட்சத்திரங்கள் உச்சத்தில் வருவதைப்பார்த்து அப்போதைய நேரத்தை சொல்லிவிடலாம். ஆனால் 27 நட்சத்திரங்களை அவைகளுடைய வரிசையில் தெரிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், வானத்தில் அவைகளை அடையாளம் காட்டவும் தெரியவேண்டும்.

பொருள்: சித்திரையிலிருந்து நான்கு மாதங்களுக்கு (இது முதல் சுற்று) பூச நட்சத்திரத்திலிருந்து எண்ணு; ஆவணியிலிருந்து நான்கு மாதத்திற்கு (இது இரண்டாவது சுற்று) அநுஷ நட்சத்திரத்திலிருந்து எண்ணு. மார்கழி மாதத்திலிருந்து நான்கு மாதத்திற்கு (இது மூன்றாவது சுற்று) உத்திரட்டாதியிலிருந்து எண்ணு. ஒவ்வொரு நேரமும் எந்த நட்சத்திரம் உச்சத்தில் காணப்படுகிறதோ அந்த எண்ணிக்கையை இரண்டே காலால் பெருக்கி, வரும் தொகையிலிருந்து, 5m ஐக் கழிக்கவேண்டும். இங்கு m என்பது, நாம் பார்க்கும் மாதம் எதுவோ அது எந்தச் சுற்றில் வருகிறதோ அந்தச் சுற்றில் அது எத்தனையாவது மாதம் என்ற எண்ணிக்கை. இப்படி கணிக்கப்படும் எண் தான் சூரியன் அஸ்தமித்ததிலிருந்து எத்தனை நாழிகைகள் ஆகியிருக்கின்றன என்பதைத் தெரிவிக்கும் எண்.(1 நாழிகை = 24 நிமிடங்கள்).

எடுத்துக்காட்டுகள்

எ.கா.1: வைகாசி 2ம் தேதியன்று இரவில் நாம் சுவாதி (Arcturus: Alpha-Bootis) நட்சத்திரத்தை உச்சத்தில் பார்ப்பதாகக் கொள்வோம். வைகாசி மாதம் முதல் சுற்றில் இரண்டாவது மாதம். அதனால் 5m = 10. பூச நட்சத்திரத்திலிருந்து எண்ணினால் சுவாதி எட்டாவது நட்சத்திரம். 8 x 2 1/4 = 18. ஆக நமக்குக் கிடைக்கும் எண்ணிக்கை 18-10 = 8. 8 நாழிகைகள் = 3 மணி 12 நிமிடம். இதனால் அப்போதைய நேரம் ஏறக்குறைய 9-12 p.m.

எ.கா. 2: மாசி மாதம் 30 ம் தேதியன்று இரவில் சித்திரை (Spica) யை உச்சத்தில் பார்ப்பதாகக் கொள்வோம். மாசி மாதம் மூன்றாவது சுற்றில் மூன்றாவது மாதம். அதனால் 5m = 5x3 = 15. இப்பொழுது உத்திரட்டாதியிலிருந்து எண்ண வேண்டும். உத்திரட்டாதியிலிருந்து சித்திரை 16 வது நட்சத்திரம். இதை இரண்டேகாலால் பெருக்க, கிடைப்பது 36. 36 - 15 =21. சூரியாஸ்தமனத்திலிருந்து 21 நாழிகை கணக்கிட்டால், இரவு 2-24 A.M. என்பது அப்போதைய நேரத்தின் தோராயமான கணிப்பு.

இது தவிர பண்டைய தமிழ் மக்கள் பாடிய வாய்ப்பாட்டின் சிறப்புகள் வருமாறு:-

வாய்பாடின் சிறப்புகளும் குறைகளும்:-

சிறப்புகள் மூன்று.

ஒரே பாடலில் அத்தனையும் கொடுக்கப்பட்டுள்ளது.

கணிப்பு முறை வெகு எளிது.

ஒரே வாய்பாட்டை ஆண்டு முழுவதற்கும் பயன்படுத்தாமல், வெவ்வேறு மாதங்களுக்கு அததற்குரிய திருத்தங்கள் பாடலுக்குள்ளேயே பொருத்தப்பட்டிருக்கின்றன.

குறைகளும் மூன்று.

கணிப்பு மிகத் தோராயமானது. வடமொழியில் இருக்கும் 27 வாய்பாடுகளும், தமிழிலேயே வேறு மரபில் உள்ள அதேபோன்ற 27 வாய்பாடுகளும் இதை விட நேரத்தை மிகவும் துல்லியமாகச் சொல்லக்கூடியவை.

ஒவ்வொரு மாதத்திற்குள் உள்ள வெவ்வேறு நாட்களை இந்த வாய்பாடு வேறுபடுத்தாதது இதன் இரண்டாவது குறை.

நட்சத்திரங்களை அடையாளம் காட்டத்தெரியாவிட்டால் வாய்பாட்டினால் பயனில்லை.

இப்படியாக அக்காலத்து தமிழர்கள் வானிலையை அல்லது வான சாஸ்திரத்தை நன்கு அறிந்து இருந்தார்கள். அப்படி அறிந்தவர்களை கணியர் என்று அழைப்பார்கள்.

கணியர்:-

கணியர் என்பவர்கள் தமிழ்நாட்டில் வானியலிலும் அதனடிப்படையிலெழுந்த சோதிடத்திலும் வல்லவர்கள். இவர்கள் அறிவர், அறிவன், கணி, கணியன் என்றும் அழைக்கப்பட்டனர். அரசர்களின் அவையில் பெருங்கணிகள் இருந்தனர்.

தொல்காப்பியம் காட்டும் கணியர்:-

காலத்தை கணிப்பவர்கள்

"மூவகைக் காலமும் நெறியினாற்றும் அறிவர்"

களவியல் சந்தேகங்களை தீர்க்கும் மக்களுள் இக்கணியரும் ஒரு வகையினர்

"பாணன், கூத்தன், விறலி, பரத்தை,

ஆணம் சான்ற அறிவர் கண்டோர்"

மதுரையில் கணியர் தெரு

மதுரையில் வாழ்ந்த கணியர் முக்காலமும் உணர்ந்தவர். வானுலக, மண்ணுலக வாழ்க்கை பற்றி நன்கு உணர்ந்து அடக்கத்துடன் நன்னெறி பிறழாமல் வாழ்பவர்கள்.