தமிழர் நிலத்திணைகள்
நிலத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு பகுக்கப்பட்டட பாகுபாடு நிலத்திணை எனப்படும். தமிழ்நாட்டு நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு வகை நிலத் திணிவுகளைக கொண்டது. முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கொள்ளும்போது அது ஐந்தாக எண்ணப்பட்டது. இவையே தமிழர் நிலத்திணைகள்.
மொத்தத்தில் தமிழர்களின் ஐவகை நிலத்திணைகள் என்பது முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்பனவே ஆகும். சிலர் பாலையை தமிழர்களின் நிலத்திணைகளில் ஒரு வகையாக ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். அந்த வகையில் பார்த்தால் தமிழர்களின் நிலத்திணைகள் நான்கு வகைப்படும். இதனை நானிலம் என்பர்.
நானிலம்
குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த நிலமும்
முல்லை - காடும் காடு சார்ந்த நிலமும்
மருதம் - வயலும் வயல் சார்ந்த நிலமும்
நெய்தல் - கடலும் கடல் சார்ந்த நிலமும்
தமிழ்நாட்டில் பாலை என்று ஒரு நிலம் இல்லை. கோடை வெப்பத்தால் திரிந்து காணப்பட்ட நிலையில் அவற்றைப் பாலை என்றனர். பாலையையும் சேர்த்தால் தமிழர்களின் நிலத்திணைகள் ஐந்து எனலாம். இதனை ஐந்நிலம் என்றும் அழைக்கலாம்.
ஐந்நிலம்
மேலே கண்ட நான்கு வகை நிலப் பாகுபாட்டுடன் பருவ மாற்றத்தால் தோன்றும் பாலை நிலத்தையும் சேர்த்து ஐந்நிலம் எனக் கொண்டனர். தமிழ்நாட்டில் பாலை நிலம் இல்லை. இன்னும் சொல்லப்போனால், பாலை நிலம் என்பது குறிஞ்சி-நிலத்திலும், முல்லை-நிலத்திலும் தோன்றும் பருவநிலை மாற்றமே.
