சோழர்களின் சோழ மண்டலம்

bookmark

தமிழ் மரபுகளின் படி பண்டைய சோழ நாடு தற்காலத் தமிழ் நாட்டின் திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. சோழநாடு, கடலை நோக்கிச் சரிந்து செல்கின்ற ஆனால் பொதுவாக, மட்டமான நில அமைப்பைக் கொண்டது. காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளுமே சோழ நாட்டின் நிலத் தோற்றத்தின் முக்கியமான அம்சங்கள். பொன்னி என்றும் அழைக்கப்படுகின்ற காவிரி ஆற்றுக்குச் சோழநாட்டின் பண்பாட்டில் சிறப்பான இடம் இருந்தது. ஆண்டுதோறும் பொய்க்காது பெருகும் காவிரி வெள்ளம் சோழ நாட்டு மக்களுக்கு ஒரு விழாவுக்கான ஏதுக்களில் ஒன்றாக இருந்தது. ஆண்டு தோறும் கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு விழாவில் அரசர்கள், ஆண்டிகள் எல்லோருமே பங்கு பெற்றனர்.

உறையூர் கி.பி 200 ஆம் ஆண்டுக்கு முன் சோழரின் தலை நகரமாக விளங்கியது. அகழிகளாலும், மதிலாலும் சூழப்பட்ட பாதுகாப்பான நகரமாக இது விளங்கியது. காவேரிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்ட காவிரிப்பூம்பட்டினம் காவிரிக் கழிமுகத்துக்கு அண்மையில் அமைந்திருந்த ஒரு துறைமுக நகராகும். காவிரிப்பூம் பட்டினமும், நாகபட்டினமும் சோழநாட்டின் முக்கிய துறைமுக நகரங்களாகப் பெயர் பெற்றிருந்தன. இந்நகரங்களில் பல இன மக்கள் வாழ்ந்தனர். இவை வணிக மையங்களாக விளங்கிப் பல மதத்தவரையும் கவரும் இடங்களாக இருந்தன. பண்டைய ரோமர்களின் கப்பல்களும் இந்தத் துறைமுகங்களுக்கு வந்தன. கிறித்து சகாப்தத்தின் தொடக்க காலங்களைச் சேர்ந்த ரோமானிய நாணயங்கள் பல காவிரியின் கழிமுகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சோழ நாட்டின் இன்னொரு முக்கிய நகரம் தஞ்சாவூர் ஒன்பதிலிருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை சோழப்பேரரசின் தலைநகரமாக விளங்கியது. விஜயாலய சோழன் தஞ்சையைத் தன் தலைநகரமாகத் தேர்ந்தெடுத்து வெற்றிகள் பல பெற்றான். பல்லவ நாட்டைக் கைப்பற்றிய பிறகு காஞ்சியை இரண்டாம் தலைநகரமாகக் கொண்டு அவ்வப்போது சோழ அரசர்கள் அங்கிருந்தும் ஆட்சிப்பொறுப்பை கவனித்து வந்தனர். எனினும் தஞ்சையே முக்கிய நகரமாக விளங்கியது. சிறிது காலத்திற்குப் பின் தஞ்சை அதன் முதன்மை இடத்தை இழந்தது. இராசராசனின் மகன் முதலாம் இராசேந்திரன் கங்காபுரி என்ற புதியதோர் நகரை உருவாக்கி அதைத் தன் தலை நகராகக் கொண்டான். பின்னர் பதினொன்று முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக இருந்தது. 'சோழ கங்கம்' என்ற அழகிய பெரிய ஏரியைக் கொண்ட இந்நகர் பல நூற்றாண்டுகளாய் இராசேந்திரனின் பெருநோக்குக்கும் பெருமைக்கும் சின்னமாய் விளங்கி இருந்தது.

கும்பகோணத்தை அடுத்துள்ள பழையாறையில் ஒரு அரண்மைனையும், முதலாம் இராசராசனுடைய பெயரிலேயே "அருள்மொழி தேவேச்சுரம்" என்ற கோவிலும் இருந்தது. இந்த அரண்மனையில் இராசராசனின் தமக்கை குந்தவை பல காலம் விரும்பித் தங்கியிருந்தாள் என்றும் இராசராசனும் சிலகாலம் தங்கியிருந்ததாகவும் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன. முதலாம் இராசேந்திரன் மதுரையில் மிகப் பெரியதோர் அரண்மனை கட்டியதும் தவிர உத்திரமேரூர் போன்ற இடங்களிலும் சோழர் அரண்மனைகள் இருந்ததாகக் கல்வெட்டுக்களில் இருந்து அறிகிறோம். சாளுக்கிய சோழர்களின் காலத்தில், சிதம்பரம், மதுரை, காஞ்சிபுரம் ஆகியவையும் மண்டலத் தலை நகரங்களாக விளங்கின.

முத்தொள்ளாயிரத்தில் வரும் ஒரு பாடல் சோழரின் ஆட்சிப் பரப்பைக் கூறுகிறது.

"கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால்
தத்து நீர்த் தண்ணுஞ்சை தான் மிதியா
பிற்றையும் ஈழம் மிதியா வருமே எம்
கோழியர் கோக்கிள்ளிக் களிறு"

சோழர் ஆட்சி:

சோழர் ஆட்சியில் ஆட்சிமுறை, கட்டிடக் கலை, இலக்கியம், இசை, சிற்பம். நாடகம், ஊராட்சி ஆகியவை சிறந்த நிலையில் இருந்தது. நிர்வாக மற்றும் செயலாக்க நடவடிக்கைகளில் அரசனுக்கு உதவுவதற்காக வலுவான அதிகார அமைப்பு இருந்தது. நிர்வாகம், நீதி வழங்கல், வரி விதித்தல், பாதுகாப்புப் போன்றவற்றில் ஆலோசனைகள் கூற அமைச்சர்கள் இருந்தனர். தற்காலத்தில் இருப்பது போலச் சட்டசபையோ, சட்டவாக்க முறைமையோ இல்லாதிருந்ததால், அரசன் நீதியாகச் செயற்படுவது, தனிப்பட்ட அரசர்களின் நற்குணங்களிலும், அறவழிகளின்மீது அவனுக்கிருக்கக்கூடிய நம்பிக்கையிலுமே தங்கியிருந்தது.

ஆட்சிப் பிரிவுகள்:

சோழ அரசு ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. சோழ அரசின் சிறிய பிரிவு கிராமம். இது ஊர் எனப்பட்டது. கிராமங்கள் பல கொண்டது நாடு. இது கோட்டம் அல்லது கூற்றம் எனப்படும். நாடுகள் பல கொண்டது வளநாடு. வளநாடுகள் பல கொண்டது ஒரு மண்டலம் ஆகும். ஒவ்வொரு மண்டலமும் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

படைகள்:

கடல் கடந்த நாடுகளையும் கைப்பற்றியவர்கள் சோழர்கள். எனவே சோழப்பேரரசில் ஆற்றல் மிக்க தரைப்படை, யானைப்படை, குதிரைப்படைகளுடன், கப்பற்படையும் இருந்தன. படையின் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனிப் பெயர்கள் இருந்தன. முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் காலத்தில் 'மூன்றுகை மகாசேனை' என்ற ஒரு சிறப்புப் படையும் இருந்தது. இதுவே பல உள்நாட்டு வெளிநாட்டு வெற்றிகளை ஈட்டியது.

சமூகநிலை:

சோழரும் சாதியமும்:

சோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. "முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று 'தீண்டாச்சேரி' என ஒரு ஊர்ப் பகுதியைச் சுட்டுகிறது என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது - கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) ஓர் ஊரில் வாழ்ந்த ஒரு மக்கள் பிரிவினரைத் 'தீண்டாதார்' எனக் குறிப்பிடுகின்றது என்றும் பேராசிரியர் கோ. விசயவேணுகோபால் விளக்குகிறார். மேலும் சோழர் காலத்தில்தான் இந்தத் தீண்டத்தகாதவர் 'சேரிகள்', அரசாணையின்படி அமைக்கப்பட்டுள்ளன. மேடான இடத்தில் மேல் சாதியினரும் பள்ளமான இடத்தில் கீழ்ச் சாதியினரும் குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முற்றத்தில் வரும் மழைத்தண்ணீர் கூடத் தீட்டுப்படாததாய் இருக்கும். மேலும் குனிந்து போகும்படியாகத்தான் குடிசை கட்ட வேண்டும். ஜன்னல் வைத்துக் கட்டக் கூடாது. சுவருக்கு வெள்ளையடிக்கக் கூடாது. பிணத்தைச் சும்மாதான் எடுக்க வேண்டும். பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது. என்றெல்லாம் ஆணை போட்டு" அமுல்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆணைகள் அக்காலத்தில் நிலவிய அடக்குமுறைகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள். பிராமணர்களே சோழ நிர்வாகத்தின் முக்கியமான பதவிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மற்றவர்கள் அவர்களுக்கு வேலை செய்தார்கள். பிராமணர்கள் அல்லாதோர் ஒன்றாகச் செயல்படுவதை தடுப்பதற்கு சாதிச் சார்பையும், சாதி ஒற்றுமையையும், சாதி சமூகங்களையும் பிராமணர்கள் ஊக்குவித்தார்கள்.

பெண்டிர்:

சமூக வாழ்வில் முழுப்பங்கும் ஏற்க பெண்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை. ஆனால் அடக்கமே, பெண்களின் தலைசிறந்த அணிகலனாகக் கருதப்பட்டது. பொதுவாகச் சொத்து வைத்துக் கொள்வதற்கும் அந்தத் சொத்துக்களைத் தாங்கள் விரும்பியபடி அனுபவித்து வரவும் அவர்களுக்கு உரிமை இருந்துவந்தது. அரசர்கள் மீது அரச குடும்பத்துப் பெண்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அரசர்களும் செல்வந்தர்களும் பல மனைவியரைத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் பொதுவாக ஓர் ஆடவனுக்கு ஒரு மனைவி என்ற நியதியே பெருவாரியாக நடைமுறையில் இருந்து வந்தது. சிறந்த பயிற்சி தேவைப்படாத வேலைகளில் பெண்கள் அமர்த்தப்பட்டனர்.

உடன்கட்டை ஏறுதல்

கணவரை இழந்த பெண் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறுவதைப் பற்றிச் சில கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சோழநாட்டில் இத்தகைய நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகவே நடந்தன. இது பரவலான வழக்கமாக இல்லை. முதலாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில், வீரச் சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளூர்ச் சிற்றரசனின் மனைவி கங்கா தேவியார் என்பவள் தீக்குளிக்கு முன் ஒரு கோயிலில் நந்தா விளக்கேற்ற நிவந்தங்கள் கொடுத்தாள் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இராசராச பேரரசனின் தாயாரும் சுந்தர சோழனின் மனைவியுமான வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறிய செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது. வீரமிக்க இந்தச் செயலுக்காக, மக்கள் வானவன் மாதேவியாரைப் போற்றி வழிபட்டார்கள் என்றாலும் பின்பற்றவில்லை என்றே தெரியவருகிறது. வேறு எந்தச் சோழ அரசியும் உடன்கட்டை ஏறவில்லை. பொதுவாகப் பெண்கள் உடன்கட்டை ஏறும் முறைக்கு மக்களிடையே ஆதரவு இல்லாமல் இருந்தது அந்தக் காலத்தில் உடன் கட்டை ஏறத் துணிந்தவர்களை தடுத்தவர்களைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

ஆடல் வல்லார்:

சோழர் காலத்தில் ஆடலும் பாடலும் ஓங்கியிருந்தன. ஆடல் மகளிர் பிறரைக் கவரும் வகையில் திகழ்ந்தனர். பரதத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்று, திருக்கோயில்களில் தொண்டு புரிந்தாள். தான் விரும்பியவரை மணம் புரிந்து கொண்டாள். இவர்களுக்குச் சமூகத்தில் மிகவும் மரியாதையும் சிறப்பும் வழங்கப்பட்டது. கோவில் நடனமாடும் கலை வளர்ச்சிக்குத் தங்கள் உயிர்களை அர்ப்பணித்த அக்காலத்திய தேவரடியார்கள், கிரேக்க நாட்டு ஆடற் பெண்டிர் போன்ற பண்புநலன் உள்ளவர்களாயும் கலையுணர்வு உடையவர்களாயும் திகழ்ந்தனர். கலை நுணுக்கங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்குக் கண்ணுக்கும் செவிக்கும் நல் விருந்தளித்தனர். திருக்கோயில்களில் இறைத் தொண்டிற்காகவே பலர், தங்கள் வாழ்நாளையெல்லாம் அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களது வருவாயில் பெரும்பங்கு கோயில் வழிபாடு முதலிவற்றிற்காகவே செலவிடப்பட்டது என்று பின்னே வந்த முகமதிய எழுத்தாளர்கள் வியப்புடன் தெரிவிப்பதில் அறியலாம்.

சோழர் காலத்தில் தேவரடியார்கள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் என்பது, சோழர் அவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான கொடைகளைப் பற்றிய கல்வெட்டுக்களைப் பார்த்தால் விளங்கும். இவர்கள் மணவாழ்க்கையிலும் ஈடுபட்டிருந்தனர். சதுரன் சதுரி என்னும் ஒரு தேவரடியாள் நாகன் பெருங்காடான் என்பவரின் மனைவி(அகமுடையாள்) என்று திருவொற்றியூர்க் கல்வெட்டு, கி.பி. 1049-ம் ஆண்டில் கூறுகிறது. அவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிந்த தேவரடியாள் மணமானவள் என்பதை மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு தெரிவிக்கிறது.

அடிமைகள்:

சோழர்காலத்தில் அடிமை முறை வழக்கத்தில் இருந்தது. அடிமைகளாகவே சிலர் வாழ்ந்துள்ளனர். சிலர் வரிகட்ட முடியாமல் தங்களைத் தாங்களே விற்றுக் கொண்டனர். தலைமுறை தலைமுறையாகப் பணி செய்யவும் சிலர் விற்கப்பட்டனர். போரில் சிறை பிடிக்கப்பட்ட ஆண்களும் பெண்களுமே பெரும்பாலும் பணியாளர்களாக அமர்த்தப்பட்டனர். போரிட்டு வென்ற வேற்று நாட்டிலிருந்து கொணர்ந்த பெண்கள் வேளம் என்ற மாளிகையில் குடியமர்த்தப்பட்டனர். சோழர்கள் வேளத்தில் (palace establishments) நூற்றுக்கணக்கான பெண்கள் அரசனினின் பாலியல் மற்றும் களியூட்டல் பயன்பாட்டுக்காக இருந்தார்கள். இங்கு ஆண் அடிமைகளும் வேலை செய்தார்கள். இதை பேராசிரியர் தாவுத் அலி அவர்கள் தனது "சோழர் காலக் கல்வெட்டுக்களில் வேழம் என்னும் சொல் பற்றிய ஆய்வு" என்ற ஆய்வுக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.

ரொமிலா தபார் (Romila Thapar) என்று வரலாற்று அறிஞர் இந்தியாவின் வரலாறு (A History of India) என்ற தனது நூலில் சோழர்கள் அடிமைகள் வைத்திருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். அடிமைகள் தாமாகவோ அல்லது பிறராலோ அடிமைத்தனத்துக்கு விற்கப்பட்டார்கள். கோயில்களுக்கும் அடிமைகள் விற்கப்பட்டனர். பட்டினிக் காலத்தில் இது பெருமளவில் இருந்தது என்றும் குறிப்பிடுகின்றார். அத்துடன் அடிமைகளின் எண்ணிக்கை சிறியது என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

சோழரின் வாணிகம்:

சோழர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகத்தில் சிறந்து விளங்கினர். சீனாவின் சோங் (Song) வம்சத்தின் குறிப்பொன்று, சோழ வணிகக் குழுவொன்று, கி.பி 1077 ஆம் ஆண்டில், சீன அரசவைக்குச் சென்றது பற்றிக் கூறுகின்றது. சுமத்ராத் தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் சாசனப் பகுதியொன்று, சோழநாட்டு வணிகக் கணங்களில் ஒன்றாகிய நானாதேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர் பற்றிக் குறிப்பிடுகின்றது. இது 1088 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும். இச் சாசனத்தின் கண்டுபிடிப்பு, சோழர் காலக் கடல்கடந்த வணிக முயற்சிகளுக்குச் சான்றாக அமைகின்றது.

சோழர்காலப் பண்பாட்டு அம்சங்கள்:

சோழர் காலத்தில் கலை, இலக்கியம், சமயம் முதலிய துறைகளில் பெரு வளர்ச்சி காணப்பட்டது. இத்துறைகள் எல்லாவற்றிலுமே பல்லவர் காலத்தில் தொடங்கப்பட்ட போக்குகளின் உச்ச நிலையாகச் சோழர் காலம் அமைந்தது எனலாம். சோழர் காலத்தைத் தமிழரின் செவ்வியல் காலம் (classical age) என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. எனினும் சங்க காலமே தமிழரின் செவ்வியல் காலம் என்ற கருத்தும் இருக்கின்றது. பாரிய கோயில் கட்டிடங்களும், கற் சிற்பங்களும், வெண்கலச் சிலைகளும், இந்தியாவில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு நுண்கலைத் திறன் வாய்ந்தவையாக அமைந்தன. சோழருடைய கடல் வலிமையும், வணிகமும், அவர்களுடைய பண்பாட்டுத் தாக்கங்களைப் பல நாடுகளிலும் உண்டாக்கக் காரணமாயிற்று. தற்காலத்தில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளிலும் எஞ்சியுள்ள இந்துப் பண்பாட்டுச் செல்வாக்குக்கான எடுத்துக்காட்டுகளில் பல சோழர் விட்டுச் சென்றவையே.

கலைகள்:

சோழர்காலத்தில் கட்டிடக் கலை சிறப்புற்றிருந்தது. சோழர்களின் நகரம், உள்ளாலை, புறம்பாடி என்ற இரு பிரிவாக இருந்தது. நகரங்கள் மிகப்பெரியவை. பல மாடிவீடுகள் கொண்டவை. இன்ன இடத்தில் இன்ன வகையான வீடுகள் தான் கட்டலாம் என்றும், இன்னவர்கள் இத்தனை மாடிகளுடன் தான் வீடுகள் கட்ட வேண்டும் என்றும் விதிகள் இருந்தன. பல அங்காடிகள் இருந்தன. இவர்களின் கட்டடக்கலை உன்னதத்தை விளக்குவன சோழர் அமைத்த கோவில்களே ஆகும். சோழர்காலக் கட்டிடக்கலை, பல்லவர்கள் தொடக்கிவைத்த பாணியின் தொடர்ச்சியே ஆகும். விசயாலயன் காலத்திலிருந்தே சோழர்கள் பல கோயில்களைக் கட்டினார்கள் ஆனால், முதலாம் இராசராசனுக்கு முந்திய சோழர் காலக் கட்டிடங்கள் பெரியவையாக அமையவில்லை. பேரரசின் விரிவாக்கம் சோழநாட்டின் நிதி நிலைமையிலும், ஏனைய வளங்கள் தொடர்பிலும் வளர்ச்சியை ஏற்படுத்தியதால், இராசராசன் காலத்திலும் அவன் மகனான இராசேந்திர சோழன் காலத்திலும், தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் போன்ற, அளவிற் பெரிய கோயில்களைக் கட்ட முடிந்தது. கி.பி 1009 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில், சோழர்கள் காலத்தில் அடைந்த பொருளியல் மேம்பாட்டுக்கான பொருத்தமான நினைவுச் சின்னமாகும்.

சோழர் காலம், கல்லாலும் வெண்கலத்தாலும் ஆக்கப்பட்டச் சிலைகளுக்குப் பெயர் பெற்றது. இக் காலத்துக்குரிய, சிவனின் பல்வேறு தோற்றங்கள், விஷ்ணு, மற்றும் பல கடவுட் சிலைகள் தென்னிந்தியக் கோயில்களிலும், பலநாட்டு அரும்பொருட் காட்சியகங்களிலும் காணக் கிடைக்கிறது. இச்சிலைகள் பழங்காலச் சிற்ப நூல்கள்களிலும், ஆகமங்களிலும் சொல்லப்பட்டுள்ள விதிப்படியே வார்க்கப்பட்டுள்ளன ஆயினும், 11 ஆம் மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சிற்பிகள் இவற்றைச் சிறந்த கலை நுணுக்கத்துடனும், கம்பீரத்துடனும் உருவாக்குவதில் தங்கள் சுதந்திரமான கைத்திறனையும் காட்டியுள்ளார்கள். இத்தகைய சிலைகளுள், ஆடல் கடவுளான நடராசப் பெருமானின் சிலைகள் குறிப்பிடத் தகுந்தவை ஆகும்.

கல்வி:

சோழர் காலத்தில் கல்வி சமஸ்கிருத மொழியில் பிராமணர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. கோயில்களுடன் இணைந்திருந்த கல்விக்கூடங்களில் மிகவும் ஒழுங்கான முறையில் இந்தக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. இப்படி கல்வி பயின்றவர்களே சோழ அரசின் நிர்வாகத்துறையிலும் கோயில்களிலும் உள்வாங்கப்பட்டார்கள். இன்று போல் பொதுமக்களுக்கான கல்வி என்று எதுவும் இருக்கவில்லை. ஆனால், சமூகம் அல்லது சாதி சார்ந்த தொழில்துறைகளில், தொழில் பயிலுனர் (apprenticeship) முறைப்படி அறிவூட்டப்பட்டது.

மொழி:

சோழர் காலத்தில் தமிழ் சிறப்புற்று இருந்தது. நிர்வாகம், வணிகம், இலக்கியம், சமயம் என்று பல தளங்களில் தமிழ் பயன்படுத்தப்பட்டது. சோழர்களின் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் பல தமிழிலேயே அமைந்துள்ளன. இருப்பினும் "அவற்றின் மெய்கீர்த்திகளில் சமஸ்கிருத ஆட்சியே மேலோங்கி நின்றது".

இலக்கியம்:

சோழர் காலம், தமிழ் இலக்கியத்திற்குச் சிறப்பானதொரு காலமாகும். இக்காலத்தில் இலக்கிய வளர்ச்சி மிகுந்திருந்தது. ஆனால் சோழர்களால் தமிழ், உயர் கல்வி கூடங்களில் ஊக்குவிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சோழர் காலக் கல்வெட்டுக்களில் பல இலக்கியங்கள் குறிப்பிடப் பட்டுள்ளனவாயினும், அவற்றுட் பல தற்காலம் வரை நிலைத்திருக்கவில்லை. இந்து சமய மறுமலர்ச்சியும், ஏராளமான கோயில்களின் உருவாக்கமும், இருந்த இந்துசமய நூல்களைத் தொகுப்பதற்கும், புதியவற்றை ஆக்குவதற்கும் உந்துதலாக இருந்தன. இராசராச சோழன் காலத்தில்தேவாரம் முதலிய நூல்கள் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. சமண, பௌத்த நூல்களும் இயற்றப்பட்டன. ஆயினும் அவை சோழருக்கு முற்பட்ட காலத்தை விடக் குறைவாகவே இருந்தன. திருத்தக்க தேவர் என்பவரால் இயற்றப்பட்ட சீவகசிந்தாமணியும், தோலாமொழித் தேவரால் இயற்றப்பட்ட சூளாமணியும், இந்து சமயம் சாராத முக்கியமான சோழர்கால இலக்கியங்களாகும்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த கம்பர் தமிழில் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படும் கம்பராமாயணத்தை எழுதினார். வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவி இது எழுதப்பட்டதாக இருந்தாலும், கம்பர் இதைத் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்ப ஆக்கியுள்ளார். செயங்கொண்டாரரின் கலிங்கத்துப்பரணியும் இன்னொரு சிறந்த இலக்கியம். இரண்டாம் குலோத்துங்க சோழன் பெற்ற கலிங்கத்து வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது இந்நூல். இதே அரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு ஒட்டக்கூத்தர் என்னும் புலவர் குலோத்துங்க சோழ உலா என்னும் நூலையும் தக்கயாகப் பரணி, மூவருலா என்ற நூல்களையும் இயற்றியுள்ளார். மேலும் சேக்கிழாரின் பெரிய புராணமும் இக்காலத்திலேயயே எழுதப்பட்டது. சோழர் காலத்தில்தான் திருப்பாவை, திருவெம்பாவை போன்றவை சோழ நாடெங்கும் ஓதப்பட்டன. சோழர் காலத்தில் இலக்கிய வளர்ச்சி உச்சத்தை எட்டியது.

சைவ சித்தாந்த நூல்களும் சோழர் காலத்திலேயே மலர்ந்தன. மெய்கண்டார் சிவஞானபோதம் என்ற நூலை இயற்றினார். வாகீச முனிவரின் ஞானாமிர்தம், திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் எழுதிய திருவுந்தியார், அருள்நந்தி சிவாச்சாரியார் எழுதிய சிவஞான சித்தியார், உமாபதிசிவாச்சாரியாரின் எட்டு நூல்கள் என சைவ சித்தாந்த அறிவு சோழர் காலத்தில் உருவாகி முறையான வடிவம் பெற்றது.

சமயம்:

சோழர் இந்து சமயத்தை, அதிலும் சிறப்பாகச் சைவ சமயத்தைச் சார்ந்தவர்களாவர். எனினும் பிற மதங்களையும் ஆதரித்தனர். சைவம், வைணவம் என்ற இரு மதங்களும் சோழர் காலத்தில் சிறந்திருந்தது. இவை இரண்டும் சேர்ந்து பிற்காலத்தில் இந்து மதமானது. அத்துடன் சோழர் காலத்தில் ஏராளமான சைவ, வைணவ மடங்களும் கோவில்களும் அமைக்கப்பட்டன. அவற்றிற்கு சாற்று முறை செய்ய வரியில்லா நிலங்கள், பணியாளர்கள் எனப்பெரும் பொருள் செலவிடப்பட்டது. இம்மடங்களில் உணவிடுதல், வழிப்போக்கருக்கு உப்பு, விளக்கெண்ணெய் வழங்குவது, நோய்க்கு மருத்துவம் செய்வது ஆகியன மேற்கொள்ளப்பட்டன. மக்களின் சிந்தனை பக்திநெறியில் செல்ல இவை வழிவகுத்தன. எனினும் சாளுக்கிய சோழர்கள் காலத்தில் சிலர் வைணவர் பால், எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. இது தொடர்பிலேயே அதிராசேந்திர சோழன் மரணம் அடைந்ததாகச் சிலர் கூறுகிறார்கள். ஆனால் இதற்கு போதுமான வரலாற்றுச் சான்றுகள் இல்லை.