சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை சங்க காலச் சேர வேந்தர்களுள் ஒருவன். இவன், கருவூரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டை ஆண்டவன். யானை போலப் பெருமித நோக்கு உடையவன் ஆதலால் இவனை 'யானைக்கட் சேய்' என்றனர். குறுங்கோழியூர் கிழார், பேரிசாத்தனார், பொருந்தில் இளங்கீரனார் ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர்.
மாந்தை நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசனை மாந்தரன் என்றனர்.
பதிற்றுப்பது, ஏழாம்பத்துப், பாட்டுடைத் தலைவன், செல்வக் கடுங்கோவை ஆகியவைகளைப் பாடிய புலவர் கபிலர் இல்லையே என இவன் வருத்தப்பட்டுக்கொள்வதால் 7 ஆம் பத்துத் தலைவனின் காலத்துக்குப் பிற்பட்டவன் என்பது தெளிவாகிறது.
குறுங்கோழியூர் கிழார்:
குட்டநாட்டில் இளவரசனாயிருந்து பயிற்சி பெற்று அரசனானவன் ‘குட்டுவன்". அவ்வாறு குடநாட்டிலிருந்து அரசனானவன் ‘குடவர் கோமான்". பொறைநாட்டில் (பொள்ளாச்சி நாட்டில்) அப்படி இருந்து அரசனானவன் பொறையன். இவ்வாறு மாந்தையிலிருந்து அரசனானவன் மாந்தரன். தமிழ்நாடு முழுவதும் தன்தொழில் கேட்ப நாடாண்ட சேரவேந்தர் வழிவந்தவன் என இவனைக் குறுங்கோழியூர் கிழார் பாராட்டுகிறார்.
1. இவன் தொண்டி மக்களோடு போரிட்டு வென்றவன்.
2. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இவனைப் பிடித்துச் சிறையில் வைத்திருந்தான். குழியில் விழுந்த யானை குழியை இடித்துக்கொண்டு ஏறி வந்தது போல இந்தப் பொறையன் சிறையைத் தகர்த்துக்கொண்டு தன் நாட்டுக்கு வந்து அரசனானானாம். இவன் கொடைமுரசு முழக்கி இரவலர்களை வரவழைத்துப் பரிசில் நல்குவானாம்.
3. கொல்லி நாட்டை வென்று தாக்கிக்கொண்டான். அரசர் பலர் இவனைப் பணிந்து திறை தந்தனராம். இவன் நாடு நெல்லும் கரும்பும் விளையும் வளம் மிக்கதாம். மக்கள் நெல் குற்றும்போது குரவையாடி மகிழ்வார்களாம்.
4. கடலின் ஆழம், அண்டத்தின் விரிவு, காற்று வழங்கும் திசை, ஒன்றுமில்லாமல் இயங்கும் ஆகாயம் ஆறியவற்றையெல்லாம் அளந்து அறிந்தாலும் இவனது அறிவு, அன்பு, இரக்க உணர்வு ஆகியவற்றை அளக்க இயலாது. அப்படியாக நல்லாட்சி செய்தானாம்.
பொருந்தில் இளங்கீரனார்:
இவன் மாந்தரஞ்சேரல் விளங்கில் என்னும் ஊரைக் கைப்பற்றினான். கபிலன் இன்று இருந்தால் தன் வெற்றியைப் போற்றிப் பாடியிருப்பாரே என வருத்தத்தோடு கூறினான். இதனைக் கேட்ட பொருந்தில் இளங்கீரனார் "இதோ நான் இருக்கிறேன்" என்று கூறி அவனது வெற்றியைப் பாராட்டிப் பாடினார்.
கூடலூர் கிழார்:
கூடலூர் கிழார் சங்ககால வானியல் கணியர்களில் ஒருவர். ஒரு நாள் எரிமீன் விழுவதைப் பார்த்த இவர் தன் நாட்டு அரசனுக்கு இன்ன நாளில் இறந்துவிடுவான் எனக் கணித்தார். அவர் கணித்த அதே நாளில் இந்த இரும்பொறை மாண்டானாம்.
