செல்வக் கடுங்கோ வாழியாதன்

bookmark

செல்வக் கடுங்கோ வாழியாதன் கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பொறையர் குடிச் சேர மன்னர்களில் ஒருவன். இவன் பெயர்கள் 4 வடிவங்களில் குறிப்பாடப்படுகின்றன.

1. சேரமான் கடுங்கோ வாழியாதன்

2. செல்வக் கடுங்கோ வாழியாதன்

3. சிக்கற்பள்ளித் துஞ்சிய சொல்வக் கடுங்கோ வாழியாதன்

4. கோ ஆதன் செல்லிரும்பொறை

சங்கத் தமிழ் தொகை நூலான பதிற்றுப்பத்தில், கபிலர் பாடிய ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இவன். இவன் பெயரை பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் செல்வக் கடுங்கோ வாழியாதன் எனக் குறிப்பிடுகிறார். சேரர்களில் பொறையர் மரபைச் சேர்ந்த இவன் அந்துவஞ்சேரல் இரும்பொறைக்கும், பொறையன் பெருந் தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான மாந்தரன் சேரல் இரும்பொறை என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் அரசனானான். இவனுடைய பல்வேறு குண நலன்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் கபிலர் புகழ்ந்து கூறியுள்ளார்.

சேரமான் கடுங்கோ வாழியாதன்:

சேரமான் கடுங்கோ வாழியாதன் கொங்கு நாட்டுக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேர மன்னர்களில் ஒருவன். புலவர் கபிலர் ஞாயிற்றோடு ஒப்பிட்டு இவனைப் பாடியுள்ளார்.

புறநானூற்றில் குண்டுகட் பாலியாதனார்:

பாடலிலேயே இவனது பெயர் 'செல்வக் கடுங்கோ வாழியாதன்' எனக் குறிக்கப்படுகிறது. புறநானூற்றைத் தொகுத்தவர் இவனைச் 'சிக்கற்பள்ளித் துஞ்சிய சொல்வக் கடுங்கோ வாழியாதன்' என்று குறிப்பிடுகிறார். புலவர் இவனைப் 'பூழியர் பெருமகன்' எனப் போற்றுகிறார் அத்துடன் பல ஆண்டுகள் வாழவேண்டும் என இவனை வாழ்த்துகிறார். பகைவர் பணிந்து தந்த திறையை இவன் தன் நகைப்புல இரவலர்களுகெல்லாம் வாரி வழங்கினானாம். புலவருக்கு அவரது சிறுமையை நோக்காது தன் பெருமையை எண்ணி களிறு, மா, ஆனிரை, நெல்லோடு கூடிய போர்களங்கள் ஆகியவற்றை வழங்கினானாம்.

இவனைப் பற்றி பதிற்றுப்பத்து தரும் செய்திகள்:

இவனது பெயர் விளக்கம்:

"செல்வக் கோ" என்றும், ‘செல்வக் கடுங்கோ" என்றும் இவன் போற்றப்படுவது நண்பர்களுக்கு இவன் செல்வம் போல் விளங்கியதால் எனத் தெரிகிறது.

தமிழ் மன்றம்:

போர் வெற்றியில் கிடைத்த இவனது செல்வமெல்லாம் தமிழ் மொழியின் பாதுகாப்புக்குப் பயன்பட்டதனாலும் இவனைச் செல்வக்கோ என்றனர்.

இவனைப் பெருமை படுத்தி கபிலர் பாடியது ஏன்?

இவனைக் கபிலர் தனது புலமை மிக்க வரிகளால் " மாவள்ளல்” என்று பாடுகிறார்.

மாவள்ளல்:

1. கொடுத்துவிட்டோமே எனக் கவலைப்படுவதோ, கொடுக்கிறோம் என மகிழ்வதோ இல்லாமல் வழங்கும் இவன் மாவள்ளல்.

2. பந்தர், கொடுமணம் ஊர்வாழ் பாணர்களுக்குத் தெண்கடல் முத்தும் அணிகலன்களும் வழங்கினான்

3. இளம்பிள்ளைகளைப் பேணுவது போல இவன் முதியரைப் பேணினான்.

4. நாட்டுமக்கள் அச்சமின்றித் தேவருலகில் வாழ்வது போல இவன் காலத்தில் கொலை, கொள்ளை இன்றி வாழ்ந்தனர்.

5. எல்லோருக்கும் எல்லாம் இருந்தததாம். அத்துடன் இல்லை என்னும் சொல் கூட இல்லாமல் ஆட்சி புரிந்தவன் இவன்.

இவன் ஆற்றிய போர்கள்:

6. சோழர், பாண்டியரை வென்றவன். அவர்கள் தம் கர்வம் நீக்கியவன்.

7. வில் வீரர்களுக்குக் கவசம் போன்றவன்

8. விதியை வெல்லும் வீரன்.

இவனது பண்புகள்:

1. வேள்வி முடித்த அந்தணர்க்கு அருங்கலம் வழங்கினான் (இப்படிச் சொல்பவர் அந்தணப் புலவர்)

2. அயிரை நெடுவரை போல வாழ்நாள் சிறக்கட்டும் எனப் புலவர் இவனை வாழ்த்துவதால் இவனது வழிபடு தெய்வம் அயிரைமலை ஐயப்பன் எனத் தெரிகிறது. (பதிற்றுப்பத்து 70 இல் இதனைக் காணலாம்)

மேற்கொண்டு பதிற்றுப்பத்து பதிகம் இவனைப் பற்றித் தரும் செய்திகள்:

3. செல்வக்கடுங்கோ வாழியாதனின் தந்தை அந்துவன்.

4. தாய் ஒருதந்தை என்பவன் ஈன்ற மகள் ‘பொறையன் பெருந்தேவி"

5. நாட்டில் ஆங்காங்கே ஊர்களைத் தோற்றுவித்தான்.

6. பல போர்களில் வெற்றி கண்டான்.

7. வேள்விகள் பல செய்தான்.

8. மாய வண்ணன் இவனது நல்லாசிரியன். இவன் ஓதுவதற்காக நெல்வளம் மிக்க ஒகந்தூர் என்னும் ஊரையே வழங்கினான். அவனை அமைச்சனாகவும் கொண்டான்.

9. பாடிய புலவர் கபிலர்க்குச் சிறுபுறம் என்று நூறாயிரம் காணமும் (அக்கால நாணயத்தின் பெயர்) பெருபுறமாக ‘நன்றா' என்னும் குன்றின்மீது ஏறி நின்று, தன் கண்ணுக்கும் புலவர் கண்ணுக்கும் தெரிந்த ஊர்களையெல்லாவற்றையும் கொடுத்தான்.

10. 25 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.

11. கோ ஆதன் செல்லிரும்பொறை

இவனுடைய காலத்தில் தமிழகத்தில் சமணம் பரவத் தொடங்கியிருந்தது. இக்காலத்தில் சமணத் துறவிகளுக்குப் பாறைக் குகைகளில் படுக்கைகள் உளியால் செதுக்கி உருவாக்கிக் கொடுப்பது அறமாகக் கருதப்பட்டது. கருவூருக்கு அண்மையில் புகழூர் என்னும் இடத்தில் காணப்படும் புகழூர்க் கல்வெட்டு இவனைக் "கோ ஆதன் சொல்லிரும்பொறை" எனக் குறிப்பிடுகிறது. இதில் குறிப்பிடப்படுபவன் செல்வக்கடுங்கோ வாழியாதன் எனத் தொல்லியலாளர் கருதுகின்றனர். இவன் மகன் பெருங்கடுங்கோ என்றும், பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ என்றும் அக் கல்வெட்டு மூன்று கால்வழியினரைக் காட்டுகிறது. இக் கல்வெட்டு அசோகன் காலத்து எழுத்தில் உள்ளது. இந்த எழுத்துக்குத் தமிழி எனப் பெயர் சூட்டப்படுகிறது . இந்த எழுத்தின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் ஆகும்.