செம்படவனும் பூதமும்
முன்னொரு காலத்தில் மைதீன் என்ற பெயருடைய வயது முதிர்ந்த ஏழைச் செம்படவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு மனைவியும் மூன்று பிள்ளைகளும் இருந்தார்கள். அவனிடம் ஒரு வழக்கம் இருந்தது. அவன் ஒரு நாளைக்கு நான்கு முறைதான் கடலில் வலை வீசுவான். மீன் கிடைக்காவிட்டாலும் அதற்கு மேல் அவன் வீசமாட்டான்.
அப்படி இருக்கும் சமயத்தில் தான் ஒரு நாள் பகல் வேளையில் அவன் மீன் பிடிப்பதற்காகப் புறப்பட்டான். கடற்க் கரையை அடைந்த மைதீன் கடலில் இறங்கி வலையை வீசினான். மூன்று முறை வீசியும் அவனுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. மூன்று முறையும் அவனுக்குக் கிடைத்ததெல்லாம் மண்ணும், மணலும் தான். அதனால் நான்காவது முறையாக இறைவனை நினைத்துக் கொண்டு தனது வலையை வீசினான். அவன் நினைத்தபடி வலை மிகவும் கனத்துப் போனது. அப்போது வலையைப் பொறுமையாக இழுத்தான். வலையும் கரையை அடைந்தது, உடனே ஆசையுடன் அந்த வலையை பிரித்துப் பார்த்தான். அதில் ஒரு மஞ்சள் நிறத் தகட்டாலான ஜாடி ஒன்று இருக்கக் கண்டான்.
ஜாடியின் வாய்ப்பக்கம் ஈயத்திலாலான மூடியால் மூடப் பட்டு இருந்தது. அதன் வாய்ப் பக்கத்தில் சுலைமானின் முத்திரை பதிக்கப்பட்டு இருந்தது (இஸ்லாமியர்கள் இவரை ஒரு புகழ்பெற்ற புனிதராக, இறையருள் பெற்றவராக நினைவு கூறுவர்)
ஜாடியை முதலில் பார்த்ததும் அவனுக்கு அச்ச உணர்வு தான் முதலில் ஏற்பட்டது. அதன் பின்னர் சுலைமானின் முத்திரையைப் பார்த்த பிறகே தெளிவடைந்தான். அத்துடன் ஜாடியினுள் ஏதோ விலை மதிப்பு மிக்கப் பொருள் இருக்கும் என்றும் நம்பினான். அதனால் ஏற்பட்ட ஆர்வக் கோளாறில் ஜாடியைத் திறந்து பார்த்தான்.
அடுத்த கணம் அந்த ஜாடியில் இருந்து பெரும் புகை வெளிவந்தது. பின்னர் அந்தப் புகையில் ஒரு உருவம் தெரிந்தது. அடுத்த கணம் மைதீன் ஒரு வித்யாசமான ரூபத்தைக் கண்டான். பிறகு தான் அது ஒரு பூதம் என்பதை அவன் அறிந்து கொண்டான். அதனால், உண்மையில் அவன் அச்சம் அடைந்தான்.
ஜாடியில் இருந்து வெளிவந்த அந்தப் பூதம் மைதீனைப் பார்த்து கோபத்துடன் பேசத் தொடங்கியது "என்னை வெகு காலத்திற்குப் பிறகு நீ ஜாடியில் இருந்து காப்பாற்றி மிகப் பெரிய தவறை செய்து விட்டாய். நான் உன்னை விடப் போவதில்லை. நீ சாக வேண்டியவன்" என்றது.
பூதத்தின் மேற்கண்ட வார்த்தையைக் கேட்ட மைதீன் மிகவும் கலங்கிப் போனான். அத்துடன் அவன் பூதத்திடம், "நான் ஏன் சாக வேண்டும்? உன்னை இந்த ஜாடியில் இருந்து விடுவித்ததற்க்காகவா?" என்று தைரியமாகக் கேட்டான்.
ஆனால் அந்த பூதமோ மைதீன் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. மாறாக மைதீனிடம், "நீ எப்படிச் சாக வேண்டும் என்று விரும்புகிறாய் என்பதைச் சொல், அதன் படி உனக்கு மரணத்தை பரிசாக அளிக்கிறேன்" என்று கூறியது.
"என்னைச் சாகடிப்பதிலேயே நீ ஏன் குறியாக இருக்கிறாய்? நான் உனக்கு நல்லது தானே செய்தேன்?" என்று மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்டான் மைதீன்.
அதற்கு அந்தப் பூதம், "நான் இந்தக் கடலுக்குள் பல ஆயிரம் வருடங்களாக அடைபட்டு இருந்தேன். இப்போது எனக்கு பசி எடுக்கிறது. வெகு நாட்கள் கழித்து நான் புசிக்க உன்னைப் போன்ற ஒருவன் கிடைத்து இருக்கிறான். உன்னை நான் விடுவேனா?” என்றது.
“ஆஹா! இந்த பூதம் நம்மைத் தின்பதில் குறியாக உள்ளது. அத்துடன் நம்மைத் திண்ண வேண்டும் என்றும் தீர்மானம் செய்து விட்டது. இதனிடம் இருந்து நாம் தப்பிக்க நமது புத்தியைத் தான் பயன்படுத்தி ஆக வேண்டும்” என்று யோசித்து அந்த செம்படவன் ஒரு முடிவுக்கு வந்தான்.
தான் எடுத்த அந்த முடிவின் அடிப்படையில் அந்தச் செம்படவன், ”சுலைமான் பெருமானாரின் மீது ஆணையிட்டு உன்னிடம் ஒன்றைக் கேட்கிறேன். நீ சத்தியத்தை சொல்ல வேண்டும்” என்று கேட்டான்.
அந்த செம்படவன் சுலைமான் பெருமானாரின் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் அந்த பூதம் பயந்து அலறி நின்றது. அந்தக் கலக்கத்துடன் அந்த செம்படவனிடம்,” நீ என்னிடம் என்ன கேட்க விரும்புகிறாய்? சொல்” என்றது.
உடனே அந்த செம்படவன் அந்த பூதத்திடம், ”நீ பெரிய உருவத்தைக் கொண்டு இருக்கிறாய். ஆனால், இந்த ஜாடியோ மிகச் சிறிய துவாரத்தைக் கொண்டு இருக்கிறது. நீ இதற்குள் எப்படிப் போனாய்? அத்துடன் நீ இந்த ஜாடியில் எப்படி இருந்திருக்க முடியும்? என்னால் அதனை நம்பவே முடியவில்லை. நான் கண்ணால் கண்டால் தான் நம்புவேன். நீ இந்தச் ஜாடியில் தான் இருந்தாய் என்பதை எனக்கு நிரூபித்துக் காட்டு. இதனை நான் சுலைமான் பெருமானார் மீது ஆணையாகக் கேட்கிறேன்” என்றான்.
செம்படவனை நம்பச் செய்வதற்காக ஜாடியில் உள்ளே சென்று வர அந்தப் பூதம் முடிவு செய்தது. அந்த முடிவை எடுத்த மாத்திரத்தில் அந்த பூதம் தன்னுடைய உடலைச் சுருக்கிக் கொண்டு, அதாவது கொஞ்சம் கொஞ்சமாக சுருக்கிக் கொண்டு அந்த ஜாடிக்குள் நுழைந்து விட்டது.
இந்த சமயத்துக்காகத் தான் அந்த செம்படவனும் காத்துக் கொண்டு இருந்தான். பூதம் புகுந்த அடுத்த கணம் அந்தச் செம்படவன் கணப் பொழுதில் செயல்பட்டு சுலைமானின் முத்திரையுடன் கூடிய ஈய மூடியை எடுத்து ஜாடியின் வாயில் பொருத்தி அதனை நன்கு இறுக்கமாக அந்த பூதம் வெளிவராத படி மூடிவிட்டான்.
மறுபுறம் ஜாடியில் இருந்து வெளிவருவதற்கு அந்தப் பூதம் ஆன மட்டும் அனைத்து முயற்ச்சிகளையும் செய்தது. ஜாடியை அந்தச் செம்படவன் சுலைமான் பெருமானாரின் முத்திரையைக் கொண்டு நன்றாக மூடி இருந்ததால் அந்தப் பூதத்தால் கடைசி வரையில் அந்தச் சாதியை விட்டு வெளிவர முடியவில்லை. அதனால் தவித்துப் போனது. அத்துடன் எவ்வளவு சாமர்த்தியமாகத் தன்னை வெற்றி கொண்டு விட்டான் என்று எண்ணிப் பெரிதும் வேதனை அடைந்தது அந்தப் பூதம். அத்துடன் தன்னை விடுவிக்குமாறு அந்தச் செம்படவனிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டது.
உடனே அந்தச் செம்படவன் அந்த பூதத்திடம்," பல ஆயிரம் வருடங்களாக சிறைபட்டு இருந்த உன்னை மீட்டு எடுத்தேன். ஆனால், நீயோ கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் என்னையே கொல்லப் பார்த்தாய். இனி நான் உன்னை விடுவிப்பேனா? நிச்சயம் மாட்டேன்" என்றான்.
"என்னை மட்டும் நீ திறந்து விடேன். உனக்கு நான் பல வழிகளில் உதவுவேன். என்னை நம்பு" என்றது அந்தப் பூதம்.
"பூதமே. நீயும் சில மனிதர்களைப் போல ஒரு ஏமாற்றுக்காரன் தான். நான் அதனை நன்கு உணர்ந்து கொண்டேன். நான் மட்டும் உன்னை இப்போது விடுதலை செய்தேன் என்றால் யூனான் மன்னருடைய அமைச்சர், ஞானி தூபானிடம் நடந்து கொண்டதைப் போலத் தான் நீயும் நடந்து கொள்வாய், அதனால் எதற்கு வம்பு உன்னைத் தூக்கி கடலில் போட்டு விடுகிறேன்" என்றான் செம்படவன்.
"அது யார் யூனான் மன்னனின் அமைச்சன்? அது சரி ஞானி தூபான் என்பவர் யார்? எனக்கு அவர்களைப் பற்றி எல்லாம் தெரியாது. உன்னால் அவர்களைப் பற்றி விளக்கிக் கூற முடியும் என்றால் கூறு" என்றது அந்தப் பூதம்.
"அவசியம் நீ அந்தக் கதையை கேட்க வேண்டும். அப்போது தான் உன்னைப் போன்ற நன்றி இல்லாதவர்கள் திருந்துவார்கள்" என்றான் அந்தச் செம்படவன்.
பிறகு யூனான் மன்னரின் அமைச்சரின் கதையை பற்றி அந்த பூதத்திடம் சொல்லத் தொடங்கினான் அந்தச் செம்படவன்.
