சுவாமிஜியை கறுப்பர் என்று கூறி ஒதுக்கிய வெள்ளையர்கள்

சுவாமிஜியை கறுப்பர் என்று கூறி ஒதுக்கிய வெள்ளையர்கள்

bookmark

சுவாமிஜி சுற்றுப் பயணம் செய்த போது அமெரிக்க மாநிலங்கள் பலவற்றிலும் இனபேதம் தலை தூக்கி இருந்தது. அத்துடன் ஒரு சில உணவகங்களில் சுவாமிஜி 'கறுப்பர்' என்று கூறி உணவு கூட அவருக்கு தர மறுத்தனர்.

அப்படி இருக்கும் போது தலைமுடியை வெட்டிக் கொள்வதற்காக ஒரு நாள் முடி திருத்தும் இடத்திற்குச் சென்றார் சுவாமிஜி. அங்கும் கூட இவரை கறுப்பர் என்று கூறி முடிதிருத்த மறுத்துவிட்டனர். ஒரே வார்த்தையில் தான் கறுப்பர் இல்லை என்று கூறி இருக்கலாமே என சுவாமிஜியை அவரது சீடர் ஒருவர் கேட்டார்.

"நான் நீக்ரோ இல்லை என்று கூறுவதன் மூலம் நீக்ரோ இனத்தவரை தாழ்த்திச் சொல்ல நான் விரும்பவில்லை" என்று பதில் உரைத்தார் ஸ்வாமிஜி.

அப்படிப்பட்ட உயர்ந்த குணமும் இனபேதம் காணாத பரந்த மனப்பாங்கும் பெற்று இருந்த சுவாமிஜியை வரவேற்க ரயில் நிலையத்தில் பலர் கூடி இருந்தார்கள்.

அப்போது ரயில் நிலையத்தில் ஒரு சாதாரண சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றிய நீக்ரோ ஒருவன் 'யாரை வரவேற்க இத்தனை பேர் கூடி இருக்கிறார்கள்?' என்ற வியப்புடன் ரயிலின் வருகையை எதிர்நோக்கி இருந்தான்.

இரயிலில் இருந்து சுவாமிஜி அப்போது இறங்கினார்.

சுவாமிஜியின் தோற்றத்தைக் கண்ட அந்த சுமை தூக்கும் நீக்ரோ 'இந்த மனிதர் நீக்ரோ இல்லை என்றாலும் இவரையும் கறுப்பர் என்று தானே அமெரிக்கர்கள் சிலர் சொல்லி வருகிறார்கள்" என்று எண்ணிக் கொண்டான்.

பிறகு சுவாமிஜி வந்து கொண்டு இருந்த போது அவருக்கு மிக அருகில் அவர் எதிரே வந்தான். அவர் முகத்தில் தெரிந்த நட்புணர்வை அறிந்து துணிவோடு அவரிடம் பேசத் தொடங்கினான். அப்போது பேச்சின் இறுதியில் "கறுப்பர் ஒருவரை இந்நாட்டு வெள்ளையர்கள் மகிழ்ந்து பாராட்டுவதையும் மதிப்புக் கொடுப்பதையும் பார்க்க மிகுந்த ஆனந்தம் ஏற்படுகிறது. நீங்கள் என்னோடு கைகுலுக்குவீர்களா?" என்று அந்த சுமை தூக்கும் தொழிலாளி ஆவல் ததும்பக் கேட்டான்.

"ஒ...கை கொடு" என்று கேட்டு கைகுலுக்கிவிட்டு, "சகோதரனே, உனக்கு மிக்க நன்றி" என்றவுடன் அந்த சுமைதூக்கும் தொழிலாளி அவரது அன்பிலே நெகிழ்ந்து போனான். கைகுலுக்கும் போது அந்த ஸ்பரிச உணர்வு தனது இதயத்தையே தொடுவதாக அந்தத் தொழிலாளி பிற்காலங்களில் மகிழ்ந்து பூரித்தான்.