உலாவியற் படலம் - 1171

bookmark

ஒருத்தி சீதையின் தவத்தை நினைந்து சோர்தல்

1171.    

மாது ஒருத்தி. மனத்தினை அல்லது ஓர்
தூது பெற்றிலள். இன் உயிர் சோர்கின்றாள்.
‘போது அரிக் கண் பொலன் குழைப் பூண் முலைச்
சீதை எத் தவம் செய்தனளோ?’ என்றாள்.
 
மாது ஒருத்தி மனத்தினை அல்லது ஓர் தூது பெற்றிலள்-  ஒரு
மங்கை  (தன் மனத்தினைத்  தவிர  (இராமனிடம் அனுப்ப)  வேறு ஒரு
தூதரைப்பாரைப்  பெறாதவள் ஆகினாள்; இன்னுயிர் சோர்கின்றாள்-
(இராமன்  மேல்   கொண்ட வேட்கையால்) தன் இனிய உயிர் தளர்ந்து
சோர்வுற்றாள்; போது  அரிக்கண்  பொலன் குழைப் பூண் முலைச்
சீதை- (தாமரை) மலர்  அனைய  சிவந்த  வரி  படர்ந்த கண்களையும்.
பொன்னால்    ஆன    குழைகளையும்    அணிகலன்கள்    தவழும்
செவிகளையும் தனங்களையும் உடைய சீதை; எத்தவம் செய்தனளோ?
என்றாள்   -   (இந்த   இராமனை  மணந்து  கொள்ள)  எத்தகைய
பெருந்தவம் செய்தாளோ? என ஏங்கினாள்.

இறைப்    பேற்றிற்குத் தவம் இன்றியமையாதது என்று  குறித்தவாறு.
“தவமும்  தவமுடையார்க்கு ஆகும்” (திருக். 292). தவம்  புரியாத என்
போன்றவர்கள்  இராமனையடைய  அவாவுவது   வீண்  என  நொந்து
கொண்டனள்.  வேறு  யாரிடமும்  சொல்ல   இயலாது. தன்  மனத்தை
நோக்கித்  தானே  கூறிக்  கொண்டதனால்.  “மனத்தினை  யல்லது ஓர்
தூது  பெற்றிலள்”  என்றார்.  அவனைக்  கண்டு  மகிழக்   கண்களும்
அவன்  இன்னுரை  கேட்டு  மகிழச்  செவிகளும்.  அணைத்து  மகிழத்
தனங்களையும்     சீதை     பெற்றுள்ளாள்     என     ஏங்குவாள்.
அவ்வுறுப்புகளை விதந்து எடுத்துக் கூறினாள். குழை - ஆகுபெயர்.  24